ப்ளாஷ்பேக் 2023: உலகக்கோப்பை கிரிக்கெட்... இறுதிப்போட்டியில் உடைந்த இந்திய ரசிகர்களின் இதயம்
|உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
புதுடெல்லி,
10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த தொடர் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரின் முதல் ஆட்டம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
லீக் சுற்று ஆட்டங்கள்;
உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு நியூசிலாந்து பழிதீர்த்து கொண்டது.
இந்த ஆட்டத்தில் டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி சதமடித்து நியூசிலாந்தின் வெற்றிக்கு உதவினர். இதையடுத்து நடைபெற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தையும், வங்காளதேச அணி ஆப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்க அணி இலங்கையையும் தங்களது தொடக்க ஆட்டங்களில் வீழ்த்தின.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்தித்தது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி கோலி மற்றும் ராகுலின் அபார பேட்டிங்கால் 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இத்தொடரின் லீக் ஆட்டங்கள் நவம்பர் 12ம் தேதி வரை நடைபெற்றது. லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்து அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
லீக் ஆட்டங்களில் இந்திய அணி 9 ஆட்டங்களில் 9 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது. தென் ஆப்பிரிக்கா அணி 9 ஆட்டங்களில் 7 வெற்றி, ஆஸ்திரேலியா 9 ஆட்டங்களில் 7 வெற்றி, நியூசிலாந்து 9 ஆட்டங்களில் 5 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2 முதல் 4 இடங்களை பிடித்தன.
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்
லீக் ஆட்டங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் அக்டோபர் 14ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இலக்கை விரட்டிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிர்ச்சி தோல்விகள்;
எந்த ஒரு உலகக்கோப்பை தொடரிலும் இல்லாத வகையில் இந்த உலகக்கோப்பையில் பல அதிர்ச்சி தோல்விகள் நிகழ்ந்தன. அதில் அக்டோபர் 15ம் தேதி ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 69 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிதான் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதே ஆப்கானிஸ்தான் அணி அக்டோபர் 23ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 283 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்த தொடரில் மேலும் ஒரு அதிர்ச்சி தோல்வியாக தர்மசாலாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 38 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய மேக்ஸ்வெல்
இந்த தொடரில் மேலும் ஒரு அதிர்ச்சி தோல்வி நடைபெற்றிருக்க வேண்டியது. அதாவது, நவம்பர் 7ம் தேதி ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 292 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு அதிர்ச்சி அளித்ததை போல் ஆஸ்திரேலியாவுக்கும் அதிர்ச்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி மேக்வெல்லின் (201 ரன்) அபாரமான ஆட்டத்தால் தோல்வியை சந்தித்தது. மேக்வெல்லை மட்டும் வீழ்த்தி இருந்தால் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கும் அதிர்ச்சி அளித்திருக்கும்.
அரையிறுதி ஆட்டங்கள்;
லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து அரையிறுதி ஆட்டங்கள் நவம்பர் 15ம் தேதி தொடங்கின. இதில் முதலாவது அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியாவும், 4ம் இடம் பிடித்த நியூசிலாந்தும் மோதின.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை 70 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்ன்னேறியதுடன் கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது.
இதையடுத்து நவம்பர் 16ம் தேதி நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இறுதிப்போட்டி;
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 240 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2011ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பையை கைப்பற்றியதை போல் இந்த முறையும் உலகக்கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன்...
இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து சதம் அடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
தொடர்நாயகன் விருது;
இந்த உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது தொடரில் அதிக ரன் அடித்த இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. அவர் மொத்தம் 11 இன்னிங்சில் 765 ரன்கள் குவித்தார். அதில் 3 சதம், 6 அரைசதம் அடங்கும்.
சாதனை படைத்த விராட் கோலி;
2023 உலககோப்பை தொடரில் விராட் கோலி 765 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (673 ரன்) சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
50வது ஒருநாள் சதம்;
இந்திய நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திற்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 50வது சதம் ஆகும். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (49 சதம்) சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
டைம்டு அவுட் சர்ச்சை..
நவம்பர் 6ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் - இலங்கை அணிகள் மோதின. இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. அப்போது பேட்டிங் ஆட களத்திற்கு வந்த இலங்கை முன்னணி வீரர் மேத்யூஸ் களத்திற்குள் நுழைந்தபோது அவரது ஹெல்மெட்டில் ஏதோ பிரச்சினை இருந்துள்ளது. இதை கவனித்த மேத்யூஸ் பேட்டிங் செய்யாமல் தனது ஹெல்மெட்டை மாற்ற முயன்றார்.
இதனால், அவர் 2 நிமிடங்களுக்கு மேல் பேட்டிங் செய்யாமல் களத்திலேயே நின்றுள்ளார். அப்போது டைம் அவுட் முறையில் மேத்யூசை அவுட் என அறிவிக்க வேண்டுமென, வங்காளதேச கேப்டன் ஷகீப் அல்-ஹசன் நடுவரிடம் முறையிட்டார். இதனை தொடர்ந்து டைம் அவுட் முறையில் மேத்யூஸ் அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மேத்யூஸ் ஒருபந்து கூட விளையாடாமல் (0) ரன்னில் அவுட் ஆனார். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் மேத்யூஸ்.
இந்தியாவுக்காக அதிக விக்கெட்...
இந்த தொடரில் முகமது ஷமி 24 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அவரது விக்கெட் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஒருநாள் உலக்க்கோப்பை தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஷமி படைத்தார்.
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்;
1. முகமது ஷமி - 55 விக்கெட்
2. ஜாஹீர் கான் - 44 விக்கெட்
3. ஜவஹல் ஸ்ரீநாத் - 44 விக்கெட்
காயம் காரணமாக விலகிய பாண்ட்யா....
இந்த தொடரில் அக்டோபர் 17ம் தேதி புனேவில் நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் அடித்த 5 நபர்கள்;
1. விராட் கோலி - 765 ரன்
2. ரோகித் சர்மா - 597 ரன்
3. டி காக் - 594 ரன்
4. ரச்சின் ரவீந்திரா - 578 ரன்
5. டேரில் மிட்செல் - 552 ரன்
2023 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய 5 நபர்கள்;
1. முகமது ஷமி - 24 விக்கெட்
2. ஆடம் ஜாம்பா - 23 விக்கெட்
3. தில்ஷன் மதுஷன்கா - 21 விக்கெட்
4. ஜஸ்ப்ரித் பும்ரா - 20 விக்கெட்
5. ஜெரால்டு கோட்ஸி - 20 விக்கெட்
2023 உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள்:
1. டி காக் - 4 சதம்
2. விராட் கோலி - 3 சதம்
3. ரச்சின் ரவீந்திரா- 3 சதம்
2023 உலகக்கோப்பை தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள்:
1. விராட் கோலி - 6 அரைசதம்
2. சுப்மன் கில் - 4 அரைசதம்
3. பதும் நிசாங்கா - 4 அரைசதம்
4. பாபர் ஆசம் - 4 அரைசதம்
2023 உலகக்கோப்பை தொடரில் தனி நபர் அதிகபட்சம்;
1. க்ளென் மேக்ஸ்வெல் - 201 ரன்
2. மிட்செல் மார்ஷ் - 177 ரன்
3. டி காக் - 174 ரன்
4. டேவிட் வார்னர் - 163 ரன்
5. டெவான் கான்வே - 152 ரன்
2023 உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள்;
1. ரோகித் சர்மா - 31 சிக்சர்
2. டேவிட் வார்னர் - 24 சிக்சர்
3. ஸ்ரேயாஸ் அய்யர் - 24 சிக்சர்
4. டேரில் மிட்செல் - 22 சிக்சர்
5. மேக்ஸ்வெல் - 22 சிக்சர்