< Back
சிறப்பு செய்திகள்
பிளாஷ்பேக் 2023: மனோபாலா முதல் மாரிமுத்து வரை திரையுலகை உலுக்கிய மரணங்கள்...!
சிறப்பு செய்திகள்

பிளாஷ்பேக் 2023: மனோபாலா முதல் மாரிமுத்து வரை திரையுலகை உலுக்கிய மரணங்கள்...!

தினத்தந்தி
|
28 Dec 2023 9:42 PM IST

இந்த ஆண்டில் சினிமா துறையில் பல்வேறு வகையான சாதனைகள் மற்றும் பல சோதனைகளும் நடந்துள்ளன.

2023ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வெற்றிகரமான ஆண்டு என்றே சொல்லலாம். தமிழில் வெளியான பெரும்பான்மையான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக்குவித்தன. இந்த ஆண்டில் சினிமா துறையில் பல்வேறு வகையான சாதனைகள் மற்றும் பல சோதனைகளும் நடந்துள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு மறைந்த திரைப்பிரபலங்கள் குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

| ஜனவரி

நடிகர் வடிவேலு தாயார் சரோஜினி - ஜனவரி 19

பிரபல காமெடி நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்

நடிகர் ராமதாஸ் : ஜனவரி 23

தமிழ் சினிமாவில் நடிகராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்த ஈ.ராமதாஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

ஜூடோ ரத்னம் : ஜனவரி 26

பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ஜூடோ ரத்தினம் (வயது 93) உயிரிழந்தார். இவர் 1,500 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களுக்கும் சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்துள்ளார். கொஞ்சும் குமரி, தாமரைக்குளம், போக்கிரி ராஜா, தலைநகரம் ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார்.

நடிகை ஜமுனா : ஜனவரி 27

பழம்பெரும் நடிகை ஜமுனா (வயது 86) உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். நடிகை ஜமுனா தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளார்.

டான்ஸர் ரமேஷ் : ஜனவரி 27

டிக்டாக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்களைப் போல் நடனமாடி பிரபலமானவர் ரமேஷ். இவர் கே.பி. பார்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து குதித்து டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார்.


| பிப்ரவரி :

டைரக்டர் ஷண்முகப்பிரியன் : பிப்ரவரி 2

பிரபல சினிமா டைரக்டர் ஷண்முகப் பிரியன் (வயது 71) உடல்நலக்குறைவால் சென்னை கெருகம்பாக்கத்தில் நேற்று மரணம் அடைந்தார். ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவும் கரங்கள் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். வெற்றிவிழா, பிரம்மா, ஆத்மா உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதி உள்ளார்.

இயக்குனர் கே. விஸ்வநாத் - பிப்ரவரி 3

வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி இருந்த மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் (வயது 92) காலமானார். இவர் தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ'விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது.

வாணி ஜெயராம் - பிப்ரவரி 4

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இவர் படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயர மேசை மீது விழுந்ததில் பலத்த காயமடைந்ததாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இயக்குனர் டி.பி.கஜேந்திரன் - பிப்ரவரி 5

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன் (வயது68) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் டி.பி. கஜேந்திரன். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மயில்சாமி - பிப்ரவரி 19

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி (வயது 57) மாரடைப்பால் காலமானார். 1984-முதல் சிறு சிறுவேடங்கள் மற்றும் நகைச்சுவை, குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.


| மார்ச் :


கிடாரிஸ்ட் சந்திரசேகர் - மார்ச் 9

பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றிய சந்திரசேகர் (வயது 79) உடல்நலக்குறைவால் காலமானார். மூன்று முடிச்சு படத்தில் இடம் பெற்ற "வசந்தகால நதிகளிலே" பாடலில் மவுத் ஆர்கன் வாசித்தும், பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற "இளையநிலா பொழிகிறதே" பாடலில் கிடார் இசை வாசித்தும் ரசிகர்களிடையே சந்திரசேகர் புகழ் பெற்றார்.

கோவை குணா : மார்ச் 21

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த கோவை குணா உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் : மார்ச் 24

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் (வயது 86) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் காலமானார்.


| ஏப்ரல்:


ரமணி அம்மாள் - ஏப்ரல் 4

நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட பின்னணி பாடகியுமான ரமணி அம்மாள் (70) உடல்நல குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் ஜூங்கா படத்தில் இடம்பெற்ற 'ரைஸ் ஆஃப் டான்' பாடல் சண்டக்கோழி 2 படத்தில் 'செங்கரத்தான் பாறையுல' பாடல், காப்பான் படத்தில் 'சிரிக்கி' பாடல், நேர்மையுண்டு ஓடு ராஜா நெஞ்சமுண்டு படத்தில் 'இன்டர்நெட் பசங்க' போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி - ஏப்ரல் 29

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான நிக் ஆட்ர்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி (55) உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் அஜித்தின் சிட்டிசன், ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய பல படங்களைத் தயாரித்துள்ளார்.


| மே :


நடிகர் மனோபாலா - மே 3

சினிமா டைரக்டர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபலா (69) கல்லீரல் பிரச்சினையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இவர் 24 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

நடிகர் செவ்வாழை ராசு - மே 18

'பருத்திவீரன்' திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். இவர் 'கிழக்குச் சீமையிலே' திரைப்படம் மூலம் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகமானவர். பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக செவ்வாழை ராசு நடித்துள்ளார்.

நடிகர் சரத்பாபு - மே 23

மூத்த நடிகர் சரத்பாபு (வயது 71) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் சரத்பாபு. தமிழில், 'நிழல் நிஜமாகிறது', 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.


| ஜூன் :


நடிகர் கசன் கான் - ஜூன் 13

தமிழ், மலையாளம் மொழி படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் கசன் கான் (வயது 50) மாரடைப்பால் காலமானார்.


| ஆகஸ்ட் :


நடிகர் கைலாஷ் நாத் - ஆகஸ்ட் 4

தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் கைலாஷ் நாத் (வயது 65) கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். இவர் தமிழில் ஒரு தலை ராகம், பாலைவனச்சோலை, வள்ளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சிந்து - ஆகஸ்ட் 7

அங்காடி தெரு, நாடோடிகள் போன்ற படங்களில் நடித்த நடிகை சிந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கொரோனா காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற போதிய பணம் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார். வறுமை காரணமாக போராடிய அவருக்கு நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ் மற்றும் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் உள்ளிட்டோர் உடனடியாக உதவினர்.

இயக்குனர் சித்திக் - ஆகஸ்ட் 8

நடிகர் விஜய் நடித்த ப்ரண்ட்ஸ், காவலன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் மாரடைப்பு காரணமாக காலமானார். கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வைத்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் சாது மிரண்டா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களையும் இயக்கியுள்ளார்.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் - ஆகஸ்ட் 11

பிரபல நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (வயது 94) கோவையில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

வடிவேலுவின் சகோதரர் ஜெகதீசன் - ஆகஸ்ட் 28

நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பியான ஜெகதீசன் (வயது 55) கல்லீரல் செயலிழந்ததன் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.


| செப்டம்பர் :


நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி - செப்டம்பர் 2

'அபூர்வ சகோதரர்கள்', 'அன்பே சிவம்', 'கார்கி' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (வயது 66) காலமானார். 1981ஆம் ஆண்டு வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படம் மூலம் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி சினிமாவில் அறிமுகமானார்.

நடிகர் மாரிமுத்து - செப்டம்பர் 8

இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து சீரியல் டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014-ஆம் ஆண்டு 'புலிவால்' ஆகிய 2 படங்களை இயக்கினார்.

நடிகர் பாபு - செப்டம்பர் 19

பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'என் உயிர் தோழன்' படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் பாபு, உடல்நலக்குறைவால் 30 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 1991 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, பாபு உயரமான பாறையில் இருந்து விழுந்ததில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்.

விஜய் ஆண்டனி மகள் மீரா - செப்டம்பர் 19

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


| அக்டோபர் :


தயாரிப்பாளர் வி.ஏ.துரை - அக்டோபர் 3

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினருமான வி.ஏ.துரை காலமானார். விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார்.

இயக்குனர் ஜெயதேவி - அக்டோபர் 4

தமிழ் சினிமாவின் பெண் இயக்குநராக வலம்வந்த பிரபல நடிகை ஜெயதேவி மரணம் அடைந்தார். இவர் 'நலம் நலமறிய ஆவல்', 'விலங்கு', 'விலாங்கு மீன்' ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். 'வா இந்த பக்கம்', 'நன்றி மீண்டும் வருக', 'ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது', 'பவர் ஆப் வுமன்' ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார்.

நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா - அக்டோபர் 10

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா (வயது 94) வயது மூப்பின் காரணமாக காலமானார்.

கலை இயக்குநர் மிலன் - அக்டோபர் 15

பிரபல திரைப்பட கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் காலமானார். இவர் பில்லா, வீரம், வேதாளம், துணிவு, வேலாயுதம், அண்ணாத்த, பத்து தல, விடாமுயற்சி போன்ற பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.


| நவம்பர் :



ஜூனியர் பாலையா - நவம்பர் 2

மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா (70) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் கங்கா - நவம்பர் 11

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமான நடிகர் கங்கா (வயது 63) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் உயிருள்ள வரை உஷா, கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.


| டிசம்பர் :


நடிகை சுப்புலட்சுமி - டிசம்பர் 1

கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகையும் இசைக்கலைஞருமான ஆர்.சுப்பலட்சுமி (வயது 87) உடல் நலக்குறைவால் காலமானார். இவர் தமிழில் பீஸ்ட், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மனி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

நடிகை லீலாவதி - டிசம்பர் 8

பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி (வயது 85) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மதுரை மோகன் - டிசம்பர் 9

முண்டாசுப்பட்டி பட நடிகர் 'மதுரை மோகன்' உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் முண்டாசுப்பட்டி, ரஜினி முருகன், வீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் ரா.சங்கரன் - டிசம்பர் 14

பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான ரா.சங்கரன் (வயது 92) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இவர், புதுமை பெண், மௌனராகம், ஒரு கைதியின் டைரி, சின்ன கவுண்டர், அரண்மனை காவலன், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மௌனராகம் படத்தில் நடிகர் கார்த்திக் இவரை மிஸ்டர் சந்திரமவுலி என்று அழைக்கும் அந்த காட்சிகள் ரசிகர்களிடையே பிரபலமானது.

நடிகர் போண்டா மணி - டிசம்பர் 24

நகைச்சுவை நடிகர் போண்டா மணி (வயது 60) கடந்த ஒரு வருடமாக 2 சிறுநீரகமும் செயலிழந்தது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் - டிசம்பர் 28

தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இவர் கடந்த மாதம் 18-ந்தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

மேலும் செய்திகள்