< Back
சிறப்பு செய்திகள்
பிளாஷ்பேக் 2023: தொடரும் மக்கள் நலப்பணிகள்... விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய அரசியல் நகர்வுகள்...!
சிறப்பு செய்திகள்

பிளாஷ்பேக் 2023: தொடரும் மக்கள் நலப்பணிகள்... விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய அரசியல் நகர்வுகள்...!

தினத்தந்தி
|
1 Jan 2024 8:19 PM IST

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது. அந்தவகையில் அரசியலில் நடிகர் விஜய் முன்னெடுத்த முக்கிய நகர்வுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

500 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு :

கடந்த ஜனவரி மாதம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ராயபுரம் பகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, நெய் ஏலக்காய், வெள்ளம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு, புடவை ஆகியவை வழங்கப்பட்டது.

அம்பேத்கர் பிறந்தநாளில் முக்கிய நகர்வு :

கடந்த ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார். அதன்படி மாவட்ட தலைநகரங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை :

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில், 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஜூன் 17ம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற 1,500 மாணவ, மாணவிகளுக்கு, பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்கினார்.

ஊக்கத்தொகை வழங்கும் விழாவில்

ஊக்கத்தொகை வழங்கும் விழாவில்

தளபதி விஜய் மதிய உணவு திட்டம் :

கடந்த ஜூன் 28ம் தேதி நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி , உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் 'தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு' திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

காமராஜர் பிறந்தநாளில் 'தளபதி விஜய் பயிலகம்' :

ஜூலை 15-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் விஜய் அறிவுறுத்தலின்படி, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் காமராஜரின் உருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவற்றை மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்.

காமராஜரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 'தளபதி விஜய் பயிலகம்' என்ற பெயரில் இரவு நேர பாடசாலைகள் தொடங்கப்பட உள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் அறிவித்தார்.அதன்படி தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'தளபதி விஜய் பயிலகம்' என்ற பெயரில் இரவு நேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டது .

சென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் :

ஏழை-எளிய மக்கள் சட்ட உதவிகள் தொடர்பாக அவதிபடக்கூடாது என்ற அடிப்படையில், சென்னை கொடுங்கையூரில் இலவச சட்ட ஆலோசனை கடந்த அக்டோபர் 9ம் தேதி திறக்கப்பட்டது. இந்த மையத்தில் அப்பகுதி மக்கள் மாலை வேளைகளில் சட்ட ஆலோசனைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

தளபதி விஜய் நூலகம் :

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் 'தளபதி விஜய் நூலகம்' திட்டம் கடந்த நவம்பர் 18ம் தேதி தாம்பரத்தில் தொடங்கப்பட்டது. மேலும் கிருஷ்ணகிரி, அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை, வேலூர், திருநெல்வேலி, தென்காசி, சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டது.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு :

மிக்ஜம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் மூலமாக சென்று விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவுகளையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர். சென்னை தவிர, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிவாரண பொருட்களை வழங்கினர்.

சென்னையில் 25 இடங்களில் இலவச மருத்துவ முகாம் :

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் சென்னையில் 25 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்த விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த டிசம்பர் 14ம் தேதி காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளுக்கு உட்பட்ட 25 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.

நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா :

திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி நகரில் கடந்த டிசம்பர் 30ம் தேதி நடைபெற்றது. நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.




மேலும் செய்திகள்