< Back
சிறப்பு செய்திகள்
பெயர்களை பதிவு செய்ய தயங்கிய பெண்கள்.. முதல் பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் எதிர்கொண்ட சவால்கள்
சிறப்பு செய்திகள்

பெயர்களை பதிவு செய்ய தயங்கிய பெண்கள்.. முதல் பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் எதிர்கொண்ட சவால்கள்

தினத்தந்தி
|
19 March 2024 4:10 PM IST

தொடர்ந்து விழிப்புணர்வு செய்தும், முதல் பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 28 லட்சம் பெண்கள் இறுதியில் தங்கள் சரியான பெயர்களை பதிவு செய்யவில்லை.

புதுடெல்லி:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்துவதுடன், மக்களாட்சியை மலரச் செய்யும் மிகப்பெரிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப புதுப்புது அம்சங்களை புகுத்தி, மக்களுக்கு தேர்தல் சூழ்நிலையை எளிதாக்குகிறது தேர்தல் ஆணையம். வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்கு சதவீதத்தை படிப்படியாக அதிகரித்துள்ளது.

1950-ல் உருவாக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை 17 பொதுத் தேர்தல்களை நடத்தியிருக்கிறது. விரைவில் 18-வது பொதுத் தேர்தலை நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால், 1951-52 காலகட்டத்தில் முதல் பொதுத் தேர்தலை நடத்தியபோது, நாட்டின் புவியியல் மற்றும் மக்கள்தொகை தொடர்பான பல சவால்களை தேர்தல் ஆணையம் சந்தித்தது. அப்போது பெரும்பான்மையான வாக்காளர்கள் கல்வியறிவற்றவர்களாகவும், பாரம்பரிய வழக்கத்தை தீவிரமாக கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தனர்.

சில மாநிலங்களில், பல பெண் வாக்காளர்கள் தங்கள் சொந்த பெயர்களை பதிவு செய்ய தயக்கம் காட்டினர். குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களின் பெயர்களை சொல்லி 'இன்னாரின் மனைவி, இன்னாரின் தாய், இன்னாரின் மகள்..." என உறவை மட்டுமே குறிப்பிட்டு தங்களை வாக்காளர்களாக பதிவு செய்தனர். இதனால் அந்த வாக்காளர்களை சேர்ப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு பெரிய சிக்கல் எழுந்தது.

இப்பிரச்சினை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெண்களின் ஒரிஜினல் பெயர்களை சேர்ப்பதற்கு சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குடும்ப ஆண் உறுப்பினர்களின் பெயர்களை மட்டும் சொல்லி பதிவு செய்திருந்த பெண் வாக்காளர்கள் 1951-52 பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சரியாக சேர்க்க சிறப்பு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அப்படி இருந்தும், மொத்தம் உள்ள 8 கோடிக்கும் அதிகமான பெண் வாக்காளர்களில், கிட்டத்தட்ட 28 லட்சம் பேர் இறுதியில் தங்கள் சரியான பெயர்களை பதிவு செய்யவில்லை. இதனால் அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டியிருந்தது.

குறிப்பாக, பீகார், உத்தரபிரதேசம், மத்திய பாரத் (இப்போதைய மத்திய பிரதேசம்), ராஜஸ்தான் மற்றும் விந்தியப் பிரதேசம் (இப்பகுதி மத்திய பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது) ஆகிய மாநிலங்களில் இந்த பிரச்சனை இருந்தது.

1951-52 பொதுத்தேர்தலில் நாடு முழுவதும் (ஜம்மு காஷ்மீர் தவிர) 17.3 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 45 சதவீதம் பெண் வாக்காளர்கள் ஆவர்.

இந்த விவரம், முதல் பொதுத் தேர்தல் குறித்து 1955-ல் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெளியாகி உள்ளது.

அதன்பின்னர் நடந்த தேர்தல்களில், தொடர் விழிப்புணர்வு காரணமாக பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. கடைசியாக 2019ல் நடந்த பொதுத் தேர்தலின்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 91.19 கோடியாக அதிகரித்தது. 47.34 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் 43.85 கோடி பெண் வாக்காளர்கள் இருந்தனர். இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 67.18 சதவீத பெண்கள் வாக்களித்தனர். ஆண்களின் வாக்குப்பதிவு 67.01 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் சராசரியாக 67.4 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

அதேசமயம், இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில், மொத்தம் 47.1 கோடி பெண்கள் வாக்காளர்கள் உள்ளனர். 12 மாநிலங்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

பெண்களுக்கான 'பிங்க் நிற வாக்குச்சாவடிகள்' இப்போது தேர்தல்களில் நன்கு அறியப்பட்ட அம்சமாக இருந்தாலும், முதல் பொதுத் தேர்தலில், நாடு முழுவதும் 27,527 வாக்குச்சாவடிகள் பெண் வாக்காளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புள்ளிவிவரங்கள், இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியை காட்டுவதுடன், ஆண்களின் நிழலில் இருந்து வெளிவந்து தங்களுக்கென தனி இடத்தைப் பிடித்த பெண் வாக்காளர்களின் முன்னேற்றத்தையும் காட்டுகிறது.

மேலும் செய்திகள்