< Back
சிறப்பு செய்திகள்
முத்தான முதல் உலகக் கோப்பை வெற்றி...!!!
சிறப்பு செய்திகள்

முத்தான முதல் உலகக் கோப்பை வெற்றி...!!!

தினத்தந்தி
|
25 Jun 2023 1:34 PM IST

இந்திய கிரிக்கெட் அணி 40 ஆண்டுகளுக்கு முன் இந்த நாளில்தான் முதல் உலகக் கோப்பையை வென்றது.

இன்றைய நாள் இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை முக்கியமான நாள். இந்த தினத்தில்தான் (ஜூன் 25) 1983-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய 'கில்லி'கள் வென்று வாகை சூடினார்கள். 40 ஆண்டுகளுக்கு முன் பெற்ற அந்த வெற்றி, நம் நாட்டில் கிரிக்கெட் சூழலையே புரட்டிப்போட்டது. கிரிக்கெட் பித்துப்பிடித்த தேசமாக இந்தியா மாற அச்சாரமிட்டது.

வெஸ்ட் இண்டீசை வெற்றி கொண்டு உலகக் கோப்பையை முதன்முதலாக முத்தமிட்டது இந்திய இளம் படை. வெஸ்ட் இண்டீஸ் என்றால், இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அல்ல.

விவியன் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட், கார்டன் கிரீனிட்ஜ் போன்ற பேட்டிங் பிரம்ம ராட்சசன்களும், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல் போன்ற வேகப்புயல்களும் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ்.

கனவிலும் வெல்ல முடியாததாக கருதப்பட்ட கரீபிய அணியை (வெஸ்ட் இண்டீஸ்தான்) மண்டியிட வைத்தது, கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி.

அந்த அணியின் அங்கமாக இருந்த, முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை குறித்து கூறுகையில்,

'கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை பார்த்தால், எல்லா அணிகளும் ஏறக்குறைய ஒன்றுக்கொன்று சமமானவை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் கதையே தனி. அப்போது சுமார் 15 ஆண்டுகாலமாக அவர்கள் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவந்தார்கள். எனவே அந்த ஆண்டு உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ்தான் வெல்லும் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் அந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, நாங்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தோம். அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் ஆடினோம். கயானா பெர்பைசில் நடந்த போட்டியில் வென்றோம். அப்போதுதான் எங்களுக்கு, 'நாம் ரன்களை குவித்து, ஒன்றிரண்டு விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திவிட்டால் அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடலாம். அப்போது அவர்கள் நொறுங்கிப் போய்விடக்கூடும்' என்று தோன்றியது என்கிறார்.

அதுதான், 1983 உலகக் கோப்பையில், மான்செஸ்டரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டபோது நடந்தது. அந்த போட்டியில் ஆட்ட நாயகன் ஆன யஷ்பால் சர்மா அபாரமாக ஆடி 89 ரன்களை குவித்தார். மறுபடி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா திகைக்க வைத்தது. அந்த வெற்றி, மீண்டும் இந்திய வீரர்களுக்கு நம்பிக்கையைப் பாய்ச்சியது.

அதன்பிறகு இந்தியா 2 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினாலும், இந்தியர்களுக்கு அத்தொடரில் வெற்றி வேகத்தை அளித்தது, மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பெற்ற வெற்றிதான்.

மீண்டும் லண்டன் ஓவலில் வெஸ்ட் இண்டீசின் 283 ஸ்கோரை துரத்திய இந்தியா, 2 விக்கெட் இழப்புக்கு 130 என்ற நிலையில் இருந்தது. வெங்சர்க்கார் 32 ரன்களுடனும், மொகிந்தர் அமர்நாத் 80 ரன்களுடனும் நன்றாக ஆடிக்கொண்டிருந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து 109 ரன்கள் சேர்த்தனர். வெற்றியை நோக்கி இந்தியா சீராக முன்னேறிக்கொண்டிருந்தபோது, மால்கம் மார்ஷலின் எகிறிய பவுன்சர் பந்து வெங்சர்க்காரின் முகவாய்க்கட்டையை தாக்கியது. அத்துடன் அந்த உலகக் கோப்பையில் அவரது பயணம் முடிவுக்கு வந்தது. இந்தியாவுக்கும் வெற்றி நழுவியது.

அந்நாளில் இந்திய அணி அழகான ஒரு சிறு குடும்பம் போல இருந்தது. அணி மேலாளர் மான் சிங்தான் 'அப்பா' போல. அவர், வீரர்களுக்கு 'கேட்சிங் பிராக்டிசும்' கொடுப்பார், 'அலவன்சும்' கொடுப்பார். தசைப்பிடிப்பா, தலைவலியா, மாத்திரையும் தருவார்.

'நான் காயமடைந்ததில் மோசமான துரதிர்ஷ்டமாக கருதுவது, டன்பிரிட்ஜ் வெல்சில் ஜிம்பாப்வேக்கு எதிரான இந்திய அணியின் ஆட்டத்தைக் காண உடன் செல்ல முடியாததைத்தான்' என்கிறார் வெங்சர்க்கார்.

ஆம், அப்போது இங்கே இந்தியாவில் இந்தியர்களாலும், பல கிரிக்கெட் ரசிகர்களாலும், அந்த சரித்திரப் புகழ்பெற்ற போட்டியை ரசிக்க முடியாமல் போய்விட்டது. அன்றைய தினத்தில் பி.பி.சி. ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் அந்தப் போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை, பதிவு செய்யப்படவும் இல்லை.

அந்த ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், 138 பந்துகளில் 175 ரன்களை குவித்து கலக்கினார் கபில்தேவ். பின்னர் 11 ஓவர்கள் பந்து வீசிய அவர், ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி தனி ஆளாக அந்த போட்டியை இந்தியாவுக்கு ஜெயித்துக் கொடுத்தார். அந்த வெற்றி, இந்தியாவின் வேகத்தை இன்னும் கூட்டியது.

அடுத்து செம்ஸ்போர்டில் ஆஸ்திரேலியாவை 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாய்த்தது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தங்களின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டென்னிஸ் லில்லியை வெளியே உட்காரவைத்தது ஓர் ஆச்சரியமான விஷயம்.

கோப்பைக்காக வெஸ்ட் இண்டீசுடன் மல்லுக்கட்டப் போவது இங்கிலாந்துதான் என்று நினைத்து அந்நாட்டு ரசிகர்கள் ஏராளமானவர்கள் இறுதிப்போட்டிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார்கள். ஆனால் அரையிறுதியில் அந்த அணி இந்தியாவிடம் தோற்றுவிட்டதால், பலர் வெறுத்துப்போய் டிக்கெட்டை இந்திய ரசிகர்களுக்கு விற்றுவிட்டார்கள்.

லண்டனில், லார்ட்ஸ் மைதானத்துக்கு நேர் எதிரில் இருந்த வெஸ்ட்மோர் லாண்ட்ஸ் என்ற ஓட்டலில்தான் இந்திய அணியினர் தங்கியிருந்தனர். ஓட்டலில் இருந்து மைதானம் நடந்து செல்லும் தூரம்தான். ஆனால் ஒரு பெரிய பஸ்சில் இந்திய வீரர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம் ஒரு வீரருக்கு 2 டிக்கெட்டுதான் கொடுப்பார்கள். மனைவி அல்லது நண்பருக்கு என்று கெஞ்சிக் கேட்டால், கூடுதலாக ஒன்று கிடைக்கும். இந்தியா இறுதி மோதலுக்கு முன்னேறிவிட்ட நிலையில் ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் கேட்டு இந்திய அணியினரை நச்சரித்தார்கள். அவர்களில் சிலர், இந்திய அணியின் பஸ்சில் தொற்றிக்கொண்டார்கள். பஸ், மைதானத்துக்குள் செல்லும் என்பதால், எளிதாக உள்ளே புகுந்துவிடலாம். அதன் பின், இஷ்டம் போல விரும்பிய இடத்தில் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம் என்பது அவர்கள் திட்டம்.

அந்த 25.6.1983... மறக்கமுடியாத இறுதிப்போட்டி நாள்.

கபில்தேவின் கம்பீர தலைமையில் இந்தியா ஒரு சாம்பியன் அணி போல ஆடியது. முதலில் பேட் செய்த இந்திய அணி வெறும் 183 ரன்களே சேர்த்திருந்தாலும், வெஸ்ட் இண்டீசை 140 ரன்களில் அடக்கி, 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. புரூடென்சியல் உலகக் கோப்பையை பெருமிதத்துடன் கையில் ஏந்தியது.

கிரிக்கெட், ஒரு அணி விளையாட்டுதான். ஆனால் 1983 உலகக் கோப்பை வெற்றிக்கு 'தலைவர்' கபில்தேவ் முக்கிய காரணம் என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் பலரின் கருத்து. அப்போது தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருந்த கபில்தேவ், அந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக ஆடினார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் ஜொலித்தார்.

இறுதிப்போட்டியில் அவர் பின்னால் ஓடி விவியன் ரிச்சர்ட்சின் கேட்சை பிடித்தவிதம் இன்றும் பலரது நினைவில் பசுமையாக உள்ளது.

உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து திறந்த பஸ்சில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். 1971-ம் ஆண்டில் இங்கிலாந்தில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வந்த அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணியைப் போல. பிற்பாடு, 2007-ல் டி20 முதல் உலகக் கோப்பையை கைப்பற்றிய டோனியின் அணியைப் போல.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி, இந்தி இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இனிய செயல், கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்தது.

உலகக் கோப்பையை வென்றதற்காக இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக தலா ரூ.25 ஆயிரம்தான் கிடைத்தது என்று கேள்விப்பட்ட அவர், ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி, ஒட்டுமொத்த அணிக்கும் நிதி திரட்டிக் கொடுக்க தீர்மானித்தார். அதற்காக, அப்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் என்.கே.பி.சால்வேயிடம் அவர் பேசினார். பின்னர் டெல்லியில் ஒரு அற்புதமான மாலை வேளையில் நடந்த நிகழ்ச்சியில் உணர்வுப்பூர்வமாய், அற்புதமாய் பாடினார். நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லாம் அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

'அந்த நாட்களில் நாங்கள் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.7 ஆயிரமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.5 ஆயிரமும்தான் பெற்று வந்தோம். லதாஜியின் முயற்சியால், எங்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கு காசோலை கிடைத்தது. எங்கள் வாழ்வில், கிரிக்கெட் விளையாடி முதல்முறையாக ரூ.1 லட்சம் காசோலையை கண்ணால் பார்த்தது அப்போதுதான்' என்று '1983' வீரர்கள் வியந்து சொல்கிறார்கள்.

ஸ்ரீகாந்துக்கு தைரியமூட்டிய அமர்நாத்

1983 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இரு அணியிலும் அதிக ரன் குவித்தவர் நமது ஸ்ரீகாந்துதான் (38 ரன்கள்). ஆனால் அப்போது வெஸ்ட் இண்டீசின் ஜோயல் கார்னரின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள அவர் அச்சப்பட்டிருக்கிறார். அதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். 'அந்த ஆளு கார்னர், ஆறடி எட்டங்குல உயரமுள்ளவர். அவர் ஓடிவந்து பந்து வீசும்போது, 11 அல்லது 12 அடி உயரத்தில் இருந்து பந்து சீறிக்கொண்டு வரும். அப்போது என்னுடன் பேட்டிங் செய்துகொண்டிருந்த அமர்நாத்திடம், 'பாஸ்... நான் இந்த ஆசாமியை சமாளிக்க முடியாது. நீ பார்த்துக்கிறியா?' என்று கேட்டேன். அப்போது அவர், 'சீக்கா... நீ உன் பாணியில் ஆடு' என்றார். அதன்பின், முதல் 5 ஓவர்களில் ஒற்றை ரன் கூட அடிக்காத நான், 6-வது ஓவரில் இருந்து, வாகாக வந்த பந்துகளை எல்லாம் விளாச ஆரம்பித்தேன்' என்று கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்