< Back
சிறப்பு செய்திகள்
லூனா- 25க்கும் சந்திரயான்-3க்கும் என்ன வித்தியாசம்..? எது சக்தி வாய்ந்தது...! ஆழ்ந்த ஒப்பீடு
சிறப்பு செய்திகள்

லூனா- 25க்கும் சந்திரயான்-3க்கும் என்ன வித்தியாசம்..? எது சக்தி வாய்ந்தது...! ஆழ்ந்த ஒப்பீடு

தினத்தந்தி
|
19 Aug 2023 9:37 AM GMT

இந்தியா மற்றும் ரஷியாவின் செயற்கைக்கோள்கள் இன்னும் சில நாட்களில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கப் போகின்றன.

சென்னை

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவில் இறங்க உள்ளது. நிலவில் 23-ந்தேதி தரை இறங்கும் இந்த லேண்டர் சாதனத்துக்குள் உள்ள 'ரோவர்' தனது ஆய்வை தொடங்கும்.

இதற்கிடையே, இந்தியாவுக்கு போட்டியாக ரஷியாவும் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை செலுத்தி உள்ளது. கடந்த 10-ந்தேதி, லூனா-25 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. கடந்த 1976-ம் ஆண்டு, லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா செலுத்தியது. அதன்பிறகு, 47 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஆய்வு செய்ய முனைந்துள்ளது.

எனவே, சந்திரயானை விட வேகமாக நிலவை நெருங்கி உள்ளது. அதன் எரிபொருள் சேமிப்பு திறனும் அதிகம். எனவே, சந்திரயானுக்கு முன்பாகவே, வருகிற 21-ந்தேதி நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. அதாவது, ஏவப்பட்ட 11 நாட்களில் தரையிறங்குகிறது.

நிலவின் தென்துருவம், நீர்வளம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்தப்பகுதி தனித்துவமான புவியியல் அம்சங்களை கொண்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கான வளங்கள் அங்கு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இந்தியாவும், ரஷியாவும் போட்டியிடுகின்றன.

சந்திரனில் இதற்கு முன் பல நாடுகள் தங்களது லேண்டர்களை தரையிறக்கி ஆய்வில் ஈடுபட்டு உள்ளன. ஆனால் இதுவரை எந்த நாடும் தென் துருவத்தில் தரையிறங்க முடியவில்லை. தற்போது இந்த சாதனையைச் செய்யப்போவது யார்? இந்தியா - ரஷியாவின் இரண்டு செயற்கைக்கோள்களும் இன்னும் சில நாட்களில் அங்கு தரையிறங்கப் போகிறது. இங்கு மோதல் நடக்குமா என்ற சந்தேகம் எழுவது இயல்பு தான்.

ரஷியாவின் லூனா- 25க்கும் சந்திரயான்-3 க்கும் என்ன வித்தியாசம்? சந்திரயானை விட லூனா-25 சக்தி வாய்ந்ததா? அவற்றில் இணைக்கப்பட்ட கருவிகளின் சிறப்பு என்ன? அங்கு என்ன ஆய்வுகள் மேற்கொள்ளப்போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

லூனா-25 ஐந்து நாள் பயணம் அதைத் தொடர்ந்து 5-7 நாட்கள் நிலவு சுற்றுப்பாதையில், நிலவில் இறங்கும். இதற்கிடையில், சந்திரயான்-3 மெதுவாக சந்திரனில் தரையிறங்குவதற்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் பயணத்தை உள்ளடக்கியது.

ரஷியாவின் லூனா-25 முதலில் லூனா குளோப் விளக்கு என்று அழைக்கப்பட்டது. பின்னர் அதன் பெயர் லூனா-25 என மாற்றப்பட்டது. சந்திரனுக்கு கடைசியாக அனுப்பப்பட்ட விண்கலம் லூனா-24 என்று அழைக்கப்பட்டது.

முதலில் ரஷியா இந்தியாவுடன் சேர்ந்துதான் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது. ஆனால் அந்த திட்டம் தோல்வி அடைந்ததால் தற்போது அவர்கள் தனியாக நிலவுக்கு பயணத்தை தொடங்கியுள்ளனர்.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் லூனா-25 தரையிறங்குகிறது. அதாவது இந்தியாவின் லேண்டர் தரையிறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தரையிறங்குகிறது.

லூனா-25 வெவ்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் 9 கருவிகளை கொண்டுள்ளது. அதேசமயம் சந்திரயான் 3 பல்வேறு ஆய்வு செய்யும் 7 கருவிகளை சுமந்து செல்கிறது. லூனா-25, சந்திராயன்-3 இல் இருந்து பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

லூனா-25 விண்கலத்தில் காமா-கதிர் மற்றும் நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர்கள், அகச்சிவப்பு நிறமாலைகள், மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் இமேஜிங் அமைப்புகள் உட்பட 9 அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சந்திராயன்-3 லேண்டரில் மேற்பரப்பு தெர்மோபிசிகல் பரிசோதனை மற்றும் லாங்முயர் ஆய்வு போன்ற பேலோடுகளும் அடங்கும், அதே நேரத்தில் ரோவர் ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (ஏபிஎக்ஸ்எஸ்) மற்றும் லேசர் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (எல்ஐபிஎஸ்) போன்ற 7 கருவிகளை கொண்டுள்ளது. .

ரஷியா சுமார் ஒரு வருடம் அங்கு நில ஆய்வுகளை நடத்த உள்ளது. சந்திரயான்-3 நிலவில் 14 நாட்கள் மட்டுமே ஆய்வு நடத்துகிறது. லூனா-25 உடன் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சந்திரயான்-3 லேண்டரில் ஒரு ரோபோ டிரில்லர் உள்ளது. இந்த டிரில்லர் நிலவின் மேற்பரப்பை சுமார் 6 அங்குலம் வரை தோண்டி மாதிரியை சேகரித்து அங்கு வைத்தே ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம், எவ்வளவு அந்த மாதிரியில் என்னென்ன பொருட்கள் அடங்கியுள்ளன, எவ்வளவு உள்ளன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

லூன-25க்குப் பிறகு ரஷியா பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. லூனா-26 மற்றும் லூனா-27 ஆகியவை வரவிருக்கும் திட்டங்கள். 2027 இல் சீனாவுடன் இணைந்து வேறு சில திட்டங்களையும் மேற்கொள்ள உள்ளது.

அதே சமயம் ஜப்பானுடன் இந்தியா கைகோர்த்து வருகிறது. முதலில் ஜப்பானுக்கு அங்கு தரை இறங்குவது சாத்தியம் என்பதை காட்ட வேண்டும்.

எனவே சந்திரயான்-3 திட்டத்தை கண்டிப்பாக வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது நமது தேவை. லூனா-25 மற்றும் சந்திரயான்-3 ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் வாய்ப்பு குறைவுதான். இரண்டுக்கும் இடையே 125 கி.மீ. இடைவெளி இருக்கும் என கூறப்படுகிறது.

இரண்டு லேண்டர்களும் வெவ்வேறு இடங்களில் தரையிறங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், ஒன்றுக்கொன்று எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

லூனா-25 நிலவின் மேற்பரப்பில் உள்ள பொருட்களையும் நிலவை சுற்றியுள்ள சூழலையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது மேற்பரப்பில் உள்ள பாறை அடுக்கு (ரெகோலித்), தூசி மற்றும் துகள்கள் மற்றும் வாயுக்கள் (பிளாஸ்மா) ஆகியவற்றை சேகரித்து ஆய்வு செய்யும்.

லூனா-25 இன் லேண்டரில் சோலார் பேனல்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், கணினிகள் மற்றும் பெரும்பாலான அறிவியல் கருவிகள் கொண்ட ஒரு பெட்டி உள்ளது.

லேண்டரில் 1.6 மீட்டர் நீளமுள்ள லூனார் ரோபோடிக் ஆர்ம் (எல்ஆர்ஏ, அல்லது லூனார் மேனிபுலேட்டர் காம்ப்ளக்ஸ்) உள்ளது, இது நிலவின் மேற்பரப்பில் இருந்து ஒரு அடி ஆழம் (20-30 செமீ) வரை பொருட்களை எடுக்கிறது.

சந்திரயான்-3 மூன்று தொகுதிகளால் ஆனது: ஒரு உள்நாட்டு லேண்டர் தொகுதி, ஒரு உந்துவிசை தொகுதி மற்றும் ஒரு ரோவர். நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான அறிவியல் தொகுப்புகளுடன் கூடிய ரோவர் பொருத்தப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 நிலவில் தாமதமாக தரையிறங்கினாலும் இந்தியா நிறைய செலவை மிச்சப்படுத்தி குறைந்த செலவில் அனுப்பி உள்ளது.

சிறப்பம்சங்கள்

சந்திரயான்-3

லூனா-25

குறிக்கோள்

பாதுகாப்பான நிலவு மேற்பரப்பு தரையிறக்கம், ரோவர் இயக்கம், குறைந்த செலவு மற்றும் பரிசோதனையை காட்சிப்படுத்துதல்

நிலவின் தென் துருவ ரெகோலித்தை ஆய்வு செய்வது

அனுபப்பட்ட தேதி

ஜூலை 14, 2023

ஆகஸ்ட் 11, 2023

இடம்

சதீஷ் தவான் விண்வெளி மையம்

வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம்

தரையிறக்கம்

ஆகஸ்ட் 23, 2023 அன்று நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம் செய்யப்படும்.

ஆகஸ்ட் 21, 2023 அன்று நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கம் செய்யப்படும்.

பட்ஜெட்

ரூ. 625 கோடி

ரூ.1663 கோடி

எதிர்பார்க்கப்படும் கால அளவு

40 நாட்கள்

5 நாட்கள்

மேலும் செய்திகள்