பாக்கெட் உணவு பொருட்களில் 'விபரீத ரசாயனம்': குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும்
|ஆபத்தான ரசாயனம் கலப்பதாக கண்டறியப்பட்டபிறகு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை 61 முறை சோதனை செய்கிறார்கள்.
மனிதனின் அடிப்படை தேவைகளில் முதன்மையானது உணவு. நாம் பசி எடுக்கும்போது உணவை தேடுகிறோம். ஒரு காலத்தில் காய்கறிகள், தானியங்களை நாமே உற்பத்தி செய்து சாப்பிட்டு வந்தோம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டது. அத்துடன் உணவே மருந்தும் ஆனது.
ஆனால்...தற்போது பல்வேறு உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்கி சாப்பிடுகிறோம். அதில் மாமிச உணவுகளும் அடங்கும்.
பொதுவாக உணவு பொருட்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு கெட்டுவிடும். ஆனால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கின்றன.
இதற்காக அதிக அளவில் ரசாயன பொருட்களை கலப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த உணவு பொருட்களை சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட ரசாயனம்
அப்படி என்ன விபரீதமாக இருந்து விட போகிறது....என்று தானே கேட்கிறீர்கள்... ஆம்...அந்த உணவு பொருட்களில், 2020-ம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ரசாயன பொருளான குளோர்பைரிபோஸ் என்ற ரசாயனம் இருந்து உள்ளது.
இந்த ரசாயனம், 0.01 என்ற அளவில் மட்டுமே உணவு பொருட்களில் இருக்க வேண்டும். ஆனால் 0.0604 வரை கலக்கப்பட்டுள்ளது. இது எப்படி கண்டறியப்பட்டது என்றால் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் உள்ள சில கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அதில் அந்த ரசாயன பொருள் அதிகமாக கலந்து இருப்பது தெரியவந்தது.
திருப்பி அனுப்பிய வெளிநாட்டினர்
இதை முதலில் வெளிநாட்டில் உள்ள ஆய்வுக்குழுவினர்தான் கண்டறிந்தனர். எப்படி என்றால் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இருந்து சம்பா ரவை, வெள்ளை ரவை, மைதா மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பாக்கெட் உணவு பொருட்கள் வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
அந்த உணவு பொருட்களை அங்குள்ள அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. அதில், அவை மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்றவை என்பது தெரியவந்தது. உடனே அந்த உணவு பொருட்களை திருப்பி அனுப்பி விட்டனர்.
61 முறை சோதனை
ஆனால் இங்குள்ள அதிகாரிகள் அதே உணவு பொருட்களை ஆய்வு செய்தபோது, அதில் ரசாயனம் கலந்து இருப்பதை கண்டறிய முடியவில்லை.
எனினும் வேறொரு ஆய்வு கருவியை வாங்கி பரிசோதனை செய்தபோதுதான், அந்த உணவு பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக குளோர்பைரிபோஸ் என்ற ரசாயனத்தை கலந்து இருப்பது தெரியவந்தது.
பொதுவாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் 16 முறைகளில் சோதனை செய்யப்படும். இந்த சம்பவத்துக்கு பிறகு 61 முறை சோதனை செய்கிறார்கள்.
இப்படி சமீபத்தில் கோவையில் நடத்திய ஆய்வில்தான், பாக்கெட் உணவு பொருட்களில் அந்த ரசாயனம் கலந்து இருப்பது தெரியவந்தது.
ஆனால் அதற்கான ஆய்வு அறிக்கையை ஏனோ உணவு பாதுகாப்பு துறை வெளியிடவில்லை. எனவே மக்களிடம் உண்மையை தெரிவித்து, அவர்களது உடல் நலன் காக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்துக்காக, 'பசித்து புசி'...என்று முன்னோர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம்...இப்போதும் அதற்காகவே...'சற்று பரிசோதித்தும் புசிப்போம்'...!
உணவு பாதுகாப்பு அதிகாரி சொல்வது என்ன?
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி தமிழ்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாக்கெட் உணவு பொருட்களை பெற்று ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவை தற்போது அறிவிக்க இயலாது. ஏனென்றால் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவு குறித்து சம்பந்தப்பட்ட உணவு தயாரிப்பு நிறுவனங்கள் வேறு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய முறையீடு செய்யலாம். அதற்கு 30 நாட்கள் கால அவகாசம் உள்ளது. இதனால் தற்போது நாங்கள் எடுத்த பரிசோதனை முடிவை அறிவிக்க இயலாத நிலை இருக்கிறது. அவ்வாறு முறையீடு செய்தால் வெளிமாநிலங்களில் அந்த உணவு பொருளை ஆய்வுக்காக அனுப்பி வைப்போம். அதில் 'ரிப்போர்ட் அன் சேப்' என்று வந்தால் அந்த உணவு பொருட்கள் தடை செய்யப்படும். 'கன்பார்ம்டு ஸ்டண்டர்டு' என்று வந்தால் அந்த உணவு பொருட்கள் தரமானது. தற்போது சில நிறுவனங்கள் தயாரித்த குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட பொருட்களை திரும்ப பெறவும், ஏற்கனவே தயாரித்து ஸ்டாக் வைத்து இருந்தால் அவற்றை வெளியே கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் உணவு பொருட்கள் நீண்டநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கதான் ரசாயனம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இந்த உணவுகளை சாப்பிடுவது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.