புதிய வாழ்விடத்தைதேடும் 'அரிக்கொம்பன்'
|அரிக்கொம்பன், பெயரைகேட்டாலே சும்மா அதிருதில்ல...
ஆமாம், கேரள மாநிலம் மூணாறு மற்றும் தமிழ்நாட்டில் தேனி மாவட்ட மக்களை கதிகலங்க வைத்த யானைதான் 'அரிக்கொம்பன்'. இதை தமிழ்நாட்டில் அரிசிக்கொம்பன் என்றும் அழைக்கின்றனர்.
அரிசி பிரியரான இந்த யானை வனத்தை விட்டு வந்து கம்பம் நகருக்குள் புகுந்து மக்களை ஓடவிட்டது.
தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட இந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து நேற்று முன்தினம் பிற்பகலில் நெல்லை மாவட்டத்துக்கு லாரியில் கொண்டு வந்தனர். பின்னர் அந்த யானை மணிமுத்தாறு வன சோதனைச்சாவடி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, மேல் கோதையாறு அணை வழியாக கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
புதிய வாழ்விடத்தை நோக்கி...
அரிக்கொம்பன் யானையின் தும்பிக்கை மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால், அதற்கு வன கால்நடை டாக்டர்கள் குழுவினர் தேவையான சிகிச்சை அளித்தனர். பின்னர் நேற்று அதிகாலை நேரத்தில் அரிக்கொம்பனை விடுவிக்கும் வகையில், லாரிக்குள் யானையை சுற்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டன. உடனே, யானை விடுங்கடா சாமி...என்பதைபோன்று மெதுவாக பின்நோக்கி நகர்ந்து லாரியை விட்டு இறங்கியது. ஆனால், அது வழக்கமான பாய்ச்சலில் ஓட்டம் பிடிக்காமல் மெதுவாக அங்கிருந்து நகரத்தொடங்கியது. சிறிது நேரம் அங்கு நடமாடிய அரிக்கொம்பன் தனக்கான புதிய வாழ்விடத்தை தேடிச்சென்றது.
திடகாத்திரமாக உள்ளது
அரிக்கொம்பன் யானையை இறக்கி விடுவதற்கும், லாரி தடத்தில் சீராக செல்வதற்கும் 3 பொக்லைன் எந்திரங்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவை யானையை இறக்கி விடும் பணியில் ஈடுபட்டன. நேற்று மதியம் அந்த பொக்லைன் எந்திரங்கள் கீழே இறங்கி மணிமுத்தாறுக்கு வந்தன.
இதுகுறித்து பொக்லைன் டிரைவர்கள் கூறுகையில், "யானையை அதிகாலை 2 மணி அளவில் இறக்கி விட்டு, அங்கிருந்து வெளியே வந்துள்ளோம். அரிக்கொம்பன் திடகாத்திரமாகத்தான் உள்ளது. அது மேல்கோதையாறு பகுதியில் சுற்றி வருகிறது'' என்றனர்.
இதேபோல் யானையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல பயன்படுத்திய லாரியும் வனப்பகுதியை விட்டு நேற்று கீழே இறங்கி வந்தது.
தொடர் கண்காணிப்பு
அரிக்கொம்பன் இறக்கி விடப்பட்ட வனப்பகுதி கன்னியாகுமரி மாவட்ட வன எல்லை என்பதால் அந்த மாவட்ட வனச்சாலைகள் வழியாக அம்மாவட்ட வன ஊழியர்களும் வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டு இருக்கிறார்கள்.
நெல்லை மாவட்ட வன எல்லை பகுதியில் 13 பேர் கொண்ட மருத்துவக்குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் மேல் கோதையாறு வனப்பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து யானையை கண்காணித்து வருகின்றனர். அதன் இடப்பெயர்ச்சியை கண்காணித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.
முத்துக்குழி வனப்பகுதி நெல்லை பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் உயரமான பகுதி ஆகும். அங்குள்ள கோதையாறு நீர் வளம் மற்றும் செழிப்பான பகுதி ஆகும்.
யானைக்கூட்டம்
மேலும் யானைகள் கூட்டம், கூட்டமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயரும். தற்போது கன்னியாகுமரி மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கண்காணிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் யானை கூட்டத்துடன், அரிக்கொம்பனும் சேரும் வகையில் இங்கு கொண்டு வந்து விடப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், ஓரிரு நாட்களில் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி விடும். அப்போது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி விடும். இது யானை ஊருக்குள் வராமல், வனப்பகுதியிலேயே தங்கி இருக்க வாய்ப்பை ஏற்படுத்தும். இது யானைக்கு புதிய வாழ்விடமாக அமையும் என்றும் வனத்துறையினர் நம்புகின்றனர்.
கீழே இறங்கும் பழக்கம் கொண்டது
மலைப்பகுதியில் யானைகள் ஏறும், இறங்கும் குணாதிசயம் கொண்டவை. ஆனால், அரிக்கொம்பன் பள்ளத்தை நோக்கி கீழே இறங்கும் பழக்கம் கொண்டதாம். அது பள்ளத்தை நோக்கி இறங்குவதையே பெரும்பாலும் விரும்புமாம். இதனால் அரிக்கொம்பன் யானை பெரும்பாலும் மேற்கு மலைச்சரிவில், அதாவது கேரளா மாநில வன எல்லைப்பகுதிக்கு நகருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் தமிழக வனப்பகுதியை கடந்து யானை கீழே இறங்கி வந்து விடக்கூடாது என்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுதவிர நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலை பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு, பாபநாசம் காணி குடியிருப்பு, பாபநாசம் கீழ்அணை உள்ளிட்ட பகுதிகளில் யானை வருகிறதா? என்று இரவு பகலாக பொதுமக்களும் கண்காணித்து வருகிறார்கள்.