பாலியல் வக்கிரத்துக்காக... புதுமணத்தம்பதி புதுவிதக்கொலை
|தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை
என்னும் திருக்குறள் மூலம் அய்யன் வள்ளுவன் நமக்கு சொல்வது என்ன?
நமது உயிரே போகும் நிலை வந்தாலும்... அதற்காக இன்னொரு உயிரை கொல்லும் செயலில் ஈடுபடக்கூடாது என்கிறார்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அப்படியா இருக்கிறது. அவ்வாறு இருந்தால் நாட்டில் பல கொலைக் குற்றங்கள் நடந்திருக்காது.
பழிவாங்க...
பாலியல் வக்கிரத்துக்காக...
பணத்துக்காக...
இன்னும் பல காரணங்களுக்காக என்று
கொலைகள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.
அதுபோல்தான் இன்று நாம் வாசிக்கப்போகும் இரட்டைக்கொலையும்.
மக்களோடு ஒருவனாக நடமாடிக்கொண்டு இருந்த ஒரு மனிதனின் வக்கிரமான ஆசையால் இரண்டு உயிர்கள் பறிபோயின.
ஆம்! கேரளாவை மட்டுமல்ல நீலகிரி மாவட்டத்தையும் சேர்த்து உலுக்கிய அந்த கொடூர கொலை பற்றிய விவரம் வருமாறு:-
இளம் தம்பதி
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ளது பூரிஞ்சி என்னும் சிற்றூர். எங்கு பார்த்தாலும் தோட்டங்கள் நிறைந்து இருப்பதால் என்னவோ அந்த ஊர் மிகவும் அழகாய் காட்சியளித்தது.
இந்த ஊரை சேர்ந்தவர் உமர் (வயது28).
தொழிலுக்காக வாழைத்தோப்பை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அமைப்பு ஒன்றில் சேர்ந்து இருந்த உமர் பொதுச்சேவையிலும் ஈடுபட்டு வந்தார். இதனால் அவருக்கு அந்த பகுதியில் ஓரளவு செல்வாக்கு இருந்தது.
2018-ம் ஆண்டு... ஏப்ரல் மாதம்... 19-ந்தேதி...
அவருக்கும் பாத்திமா (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமண பந்தத்தில் இணைந்த அவர்கள், வசந்தத்தின் வாசலில் அடியெடுத்து வைத்தனர்.
ஆயிரம் ஆசைகளுடன் இல்லறத்தை தொடங்கி இருந்தனர்.
இருவரும் அதே ஊரில் தனியாக வீடு ஒன்றில் வசித்து வந்தனர்.
வீட்டுக்குள் உயிரற்ற உடல்கள்
ஜூலை மாதம் 6-ந்தேதி... காலை நேரம்
புதுமண தம்பதியின் உறவினரான ஆயிஷா... உமரின் வீட்டுக்கு சென்றார். பாத்திமாவின் பெயரை கூறி அழைத்தவாறே... வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார்.
அப்போது அவர் கண்ட காட்சி... ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் இருந்தது.
படுக்கை அறையில்... தலையில் பலத்த காயத்துடன், ரத்த வெள்ளத்தில் உமரும், பாத்திமாவும் உயிரற்ற உடல்களாக கிடந்தனர்.
சில நிமிடங்கள் செயலற்ற நிலைக்கு சென்ற ஆயிஷா... பின்னர் சுயநினைவுக்கு திரும்பியதும் பெருங்குரலெடுத்து அலறியபடியே அந்த வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அந்த வீட்டின் முன் திரண்டனர்,
என்ன...ஏது என்று விசாரித்தபடி சிலர், உமரின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அவர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
மிளகாய்ப்பொடி சிதறல்கள்
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்பெட்டா பகுதி போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி, உமர்-பாத்திமா தம்பதியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கொலை நடந்த வீடு முழுவதும், தடயத்தை தேடி போலீசார் அங்குலம்...அங்குலமாக அலசினர்.
படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பணம்-நகை திருடப்பட்டு இருந்தது.
பாத்திமாவின் செல்போனும் மாயமாகி இருந்தது. ஆனால் அதேநேரம் அவர் அணிந்து இருந்த தங்கநகை, கம்மல் உள்ளிட்டவை கொள்ளை போகவில்லை.
பாலியல் பலாத்காரம் நடைபெற்றதற்கான அறிகுறியும் தென்படவில்லை.
அப்படி என்றால் எதற்காக இந்த இரட்டை கொலை...?
போலீசாரால் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சம்பவ இடத்தில் கிடைத்த சில தடயங்கள் மூலம் கொலையாளி ஒருவன் தான் என்று மட்டும் போலீசாருக்கு தெரிய வந்தது.
அதே நேரம்... கொலையாளி தடயத்தை அழிப்பதற்காக சமையல் அறை, படுக்கை அறை உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்று இருந்தான். இது போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.
மக்கள் போராட்டம்
கொலைக்கான காரணம் பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.
ஒரு அமைப்பில் உமர் உறுப்பினராக இருந்ததால் முன்விரோதத்தில் நடந்து இருக்கலாமோ என்றும் போலீசார் சந்தேகித்தனர்.
இந்த விசாரணைகள் ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க... கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று ஊர் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது போலீசாருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தவே... கொலையாளியை பிடிக்க துரித நடவடிக்கைகளில் இறங்கினர்.
துணை சூப்பிரண்டு தேவசியா தலைமையில் தனி போலீஸ் படை ஒன்று அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணையை தொடங்கினார்கள்.
700 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை
சம்பவம் நடந்த வீட்டை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்தபோது, கொலையாளி வீட்டின் பின்பக்கம் உள்ள சமையல் அறை கதவை திறந்து உள்ளே புகுந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டனர்.
அதில்.... சம்பவம் நடந்த நாளில், அந்த வீட்டுக்கு ஒரு நபர் நடந்து வந்தது பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் அந்த நபர் கொலையாளியாக இருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர்.
ஏதோ ஒரு நம்பிக்கை ஒளி தென்பட்டதால்... போலீசார் தங்களது விசாரணை வளையத்தை விரிவுபடுத்தினர்.
அந்த பகுதியில் உள்ளவர்கள்... அந்த பகுதியில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் என சுமார் 700 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அது எதுவும்... வழக்கில் இருந்த முடிச்சுக்களை அவிழ்க்க உதவவில்லை.
கிடைத்தது துப்பு...
இருப்பினும் போலீசார் சோர்ந்துவிடவில்லை.
பாத்திமாவின் செல்போனை கொலையாளி எடுத்துச்சென்று இருந்ததால், அதன் மூலம் கொலையாளியை பிடித்து விடலாம் என்று போலீசார் கருதினார்கள்.
ஆனால் அந்த போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அந்த போன் எப்போது 'ஆன்' ஆகும் என்று போலீசார் காத்திருந்தனர்.
நாட்கள் கடந்து கொண்டே இருந்தது...
கொலை நடந்து சரியாக 6 மாதம் ஆகிவிட்டது. போலீசார் காத்திருப்புக்கு ஒருநாள் விடை கிடைத்தது. ஆம்! கொலையான பாத்திமாவின் செல்போன் 'ஆன்' ஆகியது.
அப்போது போலீசார் அந்த போனை தொடர்பு கொண்டனர். எதிர் முனையில் பேசியது ஒரு சிறுவன்.
சற்று குழப்பம் அடைந்த போலீசார்... அந்த சிறுவனிடம் பேசினர். அப்போது அந்த சிறுவன் அருகில் உள்ள வெலமுண்ட கண்டவயல் என்ற பகுதியில் இருப்பது தெரியவந்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்று... சிறுவன் மற்றும் பெற்றோரிடம் விசாரித்தனர்.
அப்போது, அவர்களது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த விசுவநாதன் என்பவர்தான், சிறுவனின பிறந்தநாளுக்கு அந்த செல்போனை பரிசாக கொடுத்துச்சென்றது தெரியவந்தது.
பிடிபட்ட கொலையாளி
சற்றும் தாமதிக்காத போலீசார்.... உடனடியாக விசுவநாதனை (35) பிடித்து விசாரித்தனர்.
தச்சு தொழிலாளியான விசுவநாதன், ஆரம்பத்தில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
போலீசாரின் 'வழக்கமான வைத்தியத்துக்கு' பின்னர்... இரட்டை கொலைகளை செய்தது நான்தான் என்பதை ஒப்புக்கொண்டார்.
கொலை நடந்து 6 மாதங்களுக்கு பின்னர்... அதாவது ஜனவரி 5-ந்தேதி விசுவநாதன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் போலீசாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருந்ததாவது:-
அடுத்தவரின் உல்லாசத்தை ரசிப்பவர்
தச்சு வேலை செய்யும் என்னை, திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களின் வீடுகளில் மணமக்கள் தங்கும் அறையை தயார் செய்து கொடுக்க அழைப்பார்கள். நானும் தச்சு வேலைகளை செய்து கொடுப்பேன்.
எனக்கு... புதுமண தம்பதிகள் உல்லாசமாக இருப்பதை பார்த்து ரசிக்கும் வினோத பழக்கம் இருந்தது.
புதுமண தம்பதிகள் இருக்கும் வீடுகளுக்கு இரவு நேரத்தில் சென்று, அவர்கள் உல்லாசமாக இருப்பதை ரகசியமாக பார்த்து ரசிப்பேன்.
இதற்காக தச்சுவேலை செய்யும் வீடுகளின், சமையல் அறை கதவை... வெளியில் இருந்தவாறே... நானே திறக்கும் வகையில் வடிவமைப்பேன். இது யாருக்கும் தெரியாது.
அதுபோல்தான்... உமருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், அவரது வீட்டிலும் என்னை தச்சு வேலைக்காக அழைத்து இருந்தனர். நான் அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துவிட்டு, அந்த வீட்டு சமையல் அறை கதவை எளிதில் திறக்கும் வகையில் மாற்றி வைத்து இருந்தேன்.
அடித்துக்கொன்றேன்
ஜூலை மாதம் 5-ந்தேதி இரவு 10 மணி...
எனது வினோத பழக்கம்... என்னை ஆட்டிப்படைத்ததால்... புதிதாக திருமணமாகி இருந்த உமர் வீட்டின், பின்பகுதிக்கு சென்றேன்.
ஏற்கனவே நான் சமையல் அறை கதவை மாற்றி அமைத்து இருந்ததால், சமையல் அறை கதவை திறந்து உள்ளே சென்றேன்.
புதுமண தம்பதியின் உல்லாசத்தை பார்க்க நீண்டநேரம் காத்திருந்தேன்.
ஆனால் அவர்கள் இரவு நீண்டநேரம் பேசினார்கள். அசதியில் அவர்கள் தூங்கிவிட்டனர்.
நான் எதிர்பார்த்து வந்தது நடக்காததால் ஏமாற்றம் அடைந்த நான், வெறுங்கையோடு செல்லக்கூடாது என்பதற்காக, அந்த அறையில் இருந்த பீரோவை திறந்தேன்.
அந்த சத்தம் கேட்டு, கண் விழித்த பாத்திமா... கூச்சல் போட்டார். அருகில் தூங்கிக்கொண்டு இருந்த உமர், திடுக்கிட்டு எழுந்தார்.
அவர் என்னை பிடிக்க முயன்றார். என்னை பார்த்ததும் நான் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டார்.
இதனால் என்னை காட்டி கொடுத்துவிடுவார்கள் என்று கருதிய நான், என்னிடம் இருந்த கம்பியால் இருவரின் தலையிலும் அடித்தேன்.
இருவரும் அலறித்துடித்தனர். சற்று நேரத்தில் அவர்களது உயிர் பிரிந்தது.
அருகே வேறு வீடுகள் இல்லாததால் இவர்களின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.
இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட நான், பீரோவில் இருந்த சில நகைகளையும், கொஞ்சம் பணத்தையும் எடுத்துக்கொண்டேன்.
எதற்கும் இருக்கட்டும் என்று... பாத்திமாவின் செல்போனை எடுத்தேன். அதனாலேயே மாட்டிக்கொண்டேன்.
மேற்கண்டவாறு வாக்குமூலத்தில் விசுவநாதன் கூறி இருந்தார்.
தூக்கு தண்டனை
உமர், பாத்திமா கொலை வழக்கு விசாரணை கல்பெட்டா செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது.
கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி, செல்போன், வீட்டில் திருடிச்சென்ற நகை உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களையும், விசுவநாதனின் வாக்குமூலத்தையும் தனிப்படை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஹரீஷ், 2022-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி தனது தீர்ப்பை கூறினார்.
அவர் தனது தீர்ப்பில் விசுவநாதனுக்கு தூக்கு தண்டனை விதித்தார். அப்போது அவர், 'கொலையாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்பாவி தம்பதிகளை கொன்றதை மன்னிக்க முடியாது. இதுபோன்ற கொலையாளியை வெளியில் விடக்கூடாது. குற்றம்சாட்டப்பட்ட கொலையாளியின் கடும் குற்றத்தை கருத்தில் கொண்டு மரண தண்டனை விதிக்கிறேன்' என்று தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து விசுவநாதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்பை எதிர்த்து விசுவநாதன் சார்பில் கடந்த ஆண்டு மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
செல்போன் மூலம் துப்புத்துலங்கியது போலீஸ் அதிகாரி பேட்டி
தம்பதி கொலை வழக்கை விசாரணை நடத்தி, கொலையாளியை கைது செய்த கல்ெபட்டா துணை போலீஸ் சூப்பிரண்டு தேவசியா கூறியதாவது:-
வயநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 6 மாதமாக கொலையாளி யார் என்றே துப்புதுலங்காமல் இருந்தது. இந்த வழக்கை போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனரோ? என்று பொதுமக்கள் கருதி வந்தனர். கொலை செய்யப்பட்ட பாத்திமாவின் செல்போனை கொலையாளி தூக்கிச்சென்றதால் அதன் மூலமாகத்தான் துப்புதுலங்கும் என்று காத்திருந்தோம். அதன்படி அந்த போன் சுவிட்ச் ஆன் ஆனபின்னர்தான் வழக்கில் துப்புதுலங்கியது. ஒரு கொலை வழக்கை துப்புதுலக்க போலீசார் முயற்சி செய்தால் எப்படியும் கொலையாளியை கைது செய்யலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு முன் உதாரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புகார் கொடுக்க முன்வராத தம்பதிகள்
இந்த கொலை வழக்கு குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-
விசுவநாதன் வாக்குமூலத்தை தொடர்ந்துதான், அவர் அடுத்தவரின் படுக்கை அறையை எட்டி பார்ப்பவர் என்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பலரது வீடுகளில் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். யாரோ நோட்டமிடுவதை பல தம்பதிகள் பார்த்து உள்ளனர். ஒரு சில நேரங்களில் விசுவநாதனும் சிக்கி உள்ளார். ஆனால் விஷயம் வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடுமே என்று புதுமண தம்பதி யாரும் புகார் செய்யவில்லை. இது விசுவாதனுக்கு வசதியாக போய்விட்டது. அவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இரட்டை கொலைக்கு பின்னர் தான், வினோத ஆசாமியின் செயல் வெளிச்சத்துக்கு வந்தது என்றனர்.