< Back
சிறப்பு செய்திகள்
ஆங்கிலேய ஆட்சியில் எழுதப்பட்ட தேசிய கீதம்
சிறப்பு செய்திகள்

ஆங்கிலேய ஆட்சியில் எழுதப்பட்ட தேசிய கீதம்

தினத்தந்தி
|
15 Aug 2023 5:34 PM IST

இந்தியா ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ் இருந்த சமயமான 1911-ல் தேசிய கீதம் எழுதப்பட்டது. `ஜன கண மன' என வங்காள மொழியில் எழுதப்பட்ட இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறைய வார்த்தைகள் 'சாது பெங்காலி' அல்லது 'டாட்சமா பெங்காலி' எனும் வங்காளக் கிளை மொழி வகையைச் சார்ந்தவை. இந்தப் பாடலை எழுதியவர் புகழ்பெற்ற கவிஞரும், ஓவியரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

தாகூரால் எழுதப்பட்ட ஐந்து பத்திகளை உள்ளடக்கிய வங்காள மொழிப் பாடலான, `பாரத்தோ பாக்யோ பிதாதா' என்ற பாடலின் முதல் பத்தி தான் `ஜன கண மன' என தேசிய கீதமாகப் பாடப்படுகிறது. 52 விநாடிகளில் பாடப்படும் இந்தப் பாடலில் நம் நாட்டுடைய வளங்கள் அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளன.

தேசிய கீதம் சுதந்திரத்துக்கு முன்னரே 1911-ம் ஆண்டு, டிசம்பர் 27-ம் தேதி கொல்கத்தாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அதன் பின்பு 1941-ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் பாடப்பட்டது.

தாகூரின் 'பாரதோ பாக்யோ பிதாதா' பாடல் இந்துஸ்தானி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 'சுப் சுக் செயின்' என்னும் பெயரில் இந்திய தேசியப் படையின் சந்திப்புக் கூட்டங்களில் உணர்ச்சி பொங்கப் பாடப்பட்டது. சுபாஷ் சந்திர போஸின் வேண்டுகோளின்படி 1943-ம் ஆண்டு இந்திய தேசிய படையைச் சேர்ந்த அபித் அலி மற்றும் மும்தாஜ் ஹூசைன் ஆகியோர் இந்துஸ்தானி மொழியில் மொழிபெயர்த்தனர். இந்துஸ்தானி மொழி என்பது இந்தியும் உருதும் கலந்தது. நமது தேசிய கீதம் இந்துஸ்தானியில் மட்டுமின்றி இந்தியாவின் தேசிய மொழிகளான 22 மொழிகளிலும், வேறு பல மொழிகளிலும் கூட மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

மார்க்ரெட் என்னும் பெண்மணியால் `இந்தியாவின் காலைப் பாடல்' என்று நம் தேசிய கீதம் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத், 'ஜன கண மன' பாடலை தேசியகீதமாக அங்கீகரிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அதில் ''நீண்ட நாட்களாக இந்தியாவின் தேசியகீதத்தைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றிய விவாதம் நிலுவையில் இருக்கிறது. இது பற்றி முறையான அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். 'ஜன கண மன' என்னும் வார்த்தைகளை உள்ளடக்கிய பாடல் இந்தியாவின் தேசியகீதமாக உறுதி செய்யப்படுகிறது. மேலும் சுதந்திரப் போராட்ட சமயங்களில் 'ஜன கண மன' பாடலுக்கு இணையாக சிறப்பு பெற்று திகழ்ந்த 'வந்தே மாதரம்' பாடலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவும் 'ஜன கண மன' பாடலுக்கு இணையாக மதிக்கப்படும். இந்த முடிவு அனைவரையும் திருப்திப்படுத்தும் என எண்ணுகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்