வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்
|காலையில் எழுந்ததும் தியானம், உடற்பயிற்சி, புத்தகம் படிப்பது என ஏதாவதொரு செயலில் சில நிமிடங்கள் ஈடுபடுவது நன்மை அளிக்கும்.
எந்தவொரு செயலை செய்யத்தொடங்கினாலும் அது வெற்றி அடைவதற்கு அன்றாட பழக்கவழக்கங்களில் பின்பற்றும் விஷயங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு சில நடைமுறைகளை முறையாக பின்பற்றி வருவதன் மூலம் வெற்றியை தக்கவைக்கலாம். எந்தவொரு வேலையையும் நெருக்கடி இல்லாமல் சுமுகமாக முடித்துவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...
முன்கூட்டியே திட்டமிடுதல்
எந்தவொரு வேலையை செய்யத்தொடங்குவதாக இருந்தாலும் அதற்கான திட்டமிடலை முன்கூட்டியே வகுத்துவிட வேண்டும். முந்தைய நாள் இரவே சில நிமிடங்களை ஒதுக்கி சரியாக திட்டமிட வேண்டும். இது வேலைக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு இரவு பொழுதிலும் சில நிமிடங்களை மறுநாளைய செயல்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டும்.
அப்படி முன்னோக்கி திட்டமிடுவது மறுநாள் செய்யப்போகும் விஷயங்களை எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் செய்து முடித்து வெற்றிவாகை சூட உதவும். அப்படி முக்கியமான செயல்பாடுகளுக்காக முந்தைய நாள் இரவில் சிறிது நேரத்தை ஒதுக்குவது தெளிவான மனநிலையுடன் நாளைய பொழுதை அணுகவும் வித்திடும்.
80/20 விதி
5 நிமிட விதியை போலவே இந்த விதிமுறையையும் பின்பற்ற வேண்டும். எந்தவொரு செயலிலும் 80 சதவீத பலன், ஒட்டுமொத்த முயற்சியின் 20 சதவீதத்தில் இருந்து கிடைக்கும் என்பதே இந்த விதியின் தாரக மந்திரம். அதாவது நாம் செய்யும் வேலைக்கு கிடைக்கும் வெற்றியில் முயற்சிக்கு 20 சதவீதம் பங்கு இருக்கிறது. அதனால் எந்தவொரு செயல்பாடுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி முயற்சிக்கும்போது உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். சாதிக்கவும் செய்யலாம்.
புத்தகம் படித்தல்
காலையில் எழுந்ததும் தியானம், உடற்பயிற்சி, புத்தகம் படிப்பது என ஏதாவதொரு செயலில் சில நிமிடங்கள் ஈடுபட வேண்டும். அதனை ஒரு சம்பிரதாயமாகவே பின்பற்ற வேண்டும். அப்படி செயல்படுவது நேர்மறையான எண்ணங்களையும், உடலுக்கு தேவையான ஆற்றலையும், கவனச்சிதறலை தடுத்து செய்யும் வேலையில் கவனத்தை குவிக்கவும் வித்திடும். ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் வழிவகை செய்யும்.
போதுமான ஓய்வு
உடல் ஆரோக்கியத்துக்கும், மனத்தெளிவுக்கும், உடல் ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கும் போதுமான ஓய்வு அவசியம். அதற்கு தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அது உடலையும், மனதையும் ரீசார்ஜ் செய்ய உதவிடும். ஒவ்வொரு இரவும் உடலும், மனமும் போதுமான நேரம் ஓய்வு பெறுவதை உறுதி செய்வது ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் நாளைய பொழுதை தொடங்குவதற்கு துணைபுரியும். செய்யும் செயல்களில் வெற்றியை தக்கவைக்கவும் வழிவகை செய்யும்.
5 நிமிட விதி
நெருக்கடியோ, நிர்பந்தமோ அதிகரிக்கும் சூழலில் 5 நிமிடங்களோ அல்லது அதற்கும் குறைவான பொழுதிலோ முடித்துவிடும் பணிகளை உடனடியாக முடித்துவிட வேண்டும். அது வேலை அதிகமாக குவிவதை தடுக்கும். நெருக்கடியான சூழலை சமாளிப்பதற்கான தைரியத்தையும் கொடுக்கும்.
இந்த எளிய பழக்கம் அடுத்த வேலையையும் இதே போல் துரிதமாக முடித்துவிடலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கி உற்சாகத்துடன் செயல்பட தூண்டும். அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக செயல்படுவதற்கும் வழிவகை செய்யும்.