'நீங்கள் எனக்கு பெரும் சொத்து' - அண்ணாமலைக்கு மோடி கடிதம்
|தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ந்தேதி(நாளை) தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில் தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலைக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-
"எனது சக காரியகர்த்தா அண்ணாமலைக்கு ராம நவமி திருநாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நலமுடன் இருப்பதாக நம்புகிறேன். ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு வந்துள்ள உங்கள் முடிவை நான் வாழ்த்துகிறேன்.
தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வின் அடிமட்ட இருப்பை வலுப்படுத்தவும், சட்ட அமலாக்கம், நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை முன்னிறுத்துவதிலும் நீங்கள் உண்மையிலேயே முக்கிய பங்காற்றியுள்ளீர்கள்.
உங்களது உறுதியான தலைமையால் கோவைக்கு மகத்தான பலன் கிடைக்கும். மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற குழு உறுப்பினர்கள் எனக்கு பெரும் சொத்து. நாம் ஒரே அணியாக, தொகுதி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபடுவோம்.
இந்தக் கடிதத்தின் மூலம் உங்கள் தொகுதி மக்களுக்கு இது சாதாரண தேர்தல் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், காங்கிரஸ் ஆட்சியில் தாங்கள் அனுபவித்த சிரமங்களை நினைவில் கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளது. பல பிரச்சினைகள் நீக்கப்பட்டுள்ளன.
இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான எங்கள் பணியில் இந்தத் தேர்தல் முக்கியமானதாக இருக்கும். நமது நிகழ்காலத்தை ஒளிமயமான எதிர்காலத்துடன் இணைக்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பு.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். இருப்பினும் இந்த தேர்தல் நமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, அதிகாலை நேரத்திலேயே மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்திவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டு மக்களின் நலனுக்காகவே எனது நேரம் அனைத்தையும் செலவிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு தனது கடிதத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.