மகளிர் உரிமை தொகை : அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
|இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி,
திருச்சி மணப்பாறை பகுதியில் கரூர் தொகுதி காங்., வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பிரதமர் மோடிக்கும் வைக்கும் வேட்டு. குறைந்தது 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
தமிழகத்தின் காலை உணவுத்திட்டம் கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி பெற மாதம் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சிலருக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மைதான்.
அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். பெண்களுக்கான சமஉரிமையை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.
சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். மணப்பாறையில் கூடுதல் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். பொன்னியாறு அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தில் சுமார் 7 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்.இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.