'400 இடங்களுக்கு மேல் வெற்றி என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல' - ராஜ்நாத் சிங்
|400 இடங்களுக்கு மேல் வெற்றி என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து 7-ம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வெறும் தேர்தல் கோஷம் அல்ல என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் கூறுவது வெறும் தேர்தலுக்கான கோஷம் அல்ல, அது எங்கள் தீர்மானம். நான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்றுள்ளேன். பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் '400 இடங்களுக்கு மேல் வெற்றி' என்ற தீர்மானத்திற்கு பீகார் மாநிலம் மேலும் நம்பிக்கை சேர்த்துள்ளது. பீகாரில் உள்ள சூழலே நாடு முழுவதும் நிலவுகிறது."
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.