< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட மாட்டேன் - சுமலதா எம்.பி. பேட்டி
நாடாளுமன்ற தேர்தல்-2024

மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட மாட்டேன் - சுமலதா எம்.பி. பேட்டி

தினத்தந்தி
|
18 March 2024 7:43 PM IST

கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக பா.ஜனதாவில் சேர உள்ளேன் என்று சுமலதா எம்.பி. கூறினார்.

பெங்களூரு,

மண்டியா தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் சுமலதா. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலும் மண்டியாவில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு மண்டியா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் சுமலதா போட்டியிடுவாரா? அல்லது கடந்த முறை போன்று தற்போதும் சுயேச்சையாக போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், பா.ஜனதா மேலிடத்தின் அழைப்பை ஏற்று நேற்று சுமலதா டெல்லிக்கு சென்றார். அதனை தொடர்ந்து டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்தித்து பேசினார்.

அதன்பிறகு, சுமலதா எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா மேலிடம் விடுத்த அழைப்பின் பேரில் டெல்லிக்கு வந்து ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசி இருந்தேன். மண்டியா தொகுதி விவகாரம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எனது விருப்பத்தை ஜே.பி.நட்டாவிடம் தெரிவித்து இருந்தேன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பது பற்றி எனக்கு தெரிவிப்பதாக ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவில் போட்டியிட்டு, முதல் முறையாக மண்டியாவில் பா.ஜனதா எம்.பி.யாக வேண்டும் என்று விரும்பினேன். மண்டியாவில் பா.ஜனதாவை பலப்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம். மண்டியா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட் கிடைக்காவிட்டால், என்ன செய்வீர்கள் என்று நீங்கள்கேட்கிறீர்கள். சுயேச்சையாக மண்டியாவில் போட்டியிட மாட்டேன். கடந்த முறை கூட சுயேச்சையாக போட்டியிட்டது நான் எடுத்த முடிவு இல்லை.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் பா.ஜனதா எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். பா.ஜனதா என்னை கைவிடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. சிக்பள்ளாப்பூரில் தொகுதியில் போட்டியிட இருப்பதாக வரும் தகவலும் உண்மை இல்லை. தற்போது நான் சுயேச்சை எம்.பி.யாக உள்ளேன். எனது எம்.பி. பதவி முடிந்ததும், கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக பா.ஜனதாவினர் சேர உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்