29 பைசா மோடி என பெயர் வைத்தது ஏன்? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
|தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தர்மபுரி,
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தர்மபுரி தொகுதியில் ஆ.மணி வெற்றி பெறுவது உறுதி என்பதை, உங்கள் எழுச்சியை பார்த்து தெரிந்து கொண்டேன். மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு வேட்டு வைக்கிறார். வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் நாம் மோடிக்கு வேட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை, சுயமரியாதை என்ன என்பதை தெரிந்து கொள்வார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பா.ஜ.க.,வும், பழனிசாமியும் செங்கல் நட்டார்கள். ஆனால் இன்று வரை வரவில்லை. அதனால் அந்த செங்கல்லை நான் பிடிங்கிட்டு வந்துட்டேன். நட்டது ஒரே செங்கல். அதை நான் எடுத்துட்டு வந்துட்டேன். இப்பொழுது செங்கல்லை காணோம் என்று தேடுகிறார்கள். நான் மருத்துவமனை கட்டினால் மட்டுமே செங்கல்லை கொடுப்பேன் என சொல்லிவிட்டேன்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கேட்டால், பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் பழனிசாமி பதில் தருகிறார். ஏனென்றால் இவர்கள் இருவரும் கள்ளக்கூட்டணி. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
நாம் 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசா கொடுக்கிறார். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் கொடுக்கிறார்கள். அதனால்தான் அவருக்கு 29 பைசா மோடி என பெயர் வைத்துள்ளேன். பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, மாநில உரிமைகள் அனைத்தையும் அடகு வைத்த அ.தி.மு.க., தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. இரு கட்சிகளுக்கும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.