< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நெல்லை நாடாளுமன்ற தொகுதி:வேட்பு மனு தாக்கல் செய்தது ஏன்? காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு பேட்டி
நாடாளுமன்ற தேர்தல்-2024

நெல்லை நாடாளுமன்ற தொகுதி:வேட்பு மனு தாக்கல் செய்தது ஏன்? காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு பேட்டி

தினத்தந்தி
|
28 March 2024 11:32 AM IST

எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தேன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு கூறியுள்ளார்.

நெல்லை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து வந்தனர். ஏற்கனவே 16 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுவை தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் ஜெகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு புறப்பட்டனர்.

அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் வெளியே வந்த ராமசுப்பு, 'காங்கிரஸ் கட்சி சார்பில் நான் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றார். காங்கிரஸ் போட்டி வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்தது அங்கு பரபரப்பை உருவாக்கியது.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நெல்லை தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளேன். வேட்புமனுவை திரும்பபெறுவதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஆதரவாளர்களை அனுப்பி உள்ளேன். எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தேன். காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக செயல்படமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்