'கர்நாடகத்தில் வெள்ளம் வந்தபோது பிரதமர் மோடி எங்கே இருந்தார்?' - சித்தராமையா
|கர்நாடக மாநிலத்தில் வெள்ளமும், வறட்சியும் ஏற்பட்டபோது பிரதமர் மோடி எங்கே இருந்தார்? என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 27-ந்தேதி மற்றும் மே 7-ந்தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி 4-வது முறையாக நேற்று கர்நாடகத்திற்கு வருகை தந்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "பெங்களூருவை தொழில்நுட்ப நகரத்தில் இருந்து 'டேங்கர்' நகரமாக காங்கிரஸ் கட்சி மாற்றிவிட்டது. காங்கிரஸ் கட்சி ஊழலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமரின் விமர்சனத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பிரதமர் மோடி 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்து வருவதாக கூறுகிறார். கர்நாடக மாநிலத்தில் வெள்ளமும், வறட்சியும் ஏற்பட்டபோது பிரதமர் மோடி எங்கே இருந்தார்? மக்களுக்காக 24 மணி நேரம் உழைக்கிறேன் என்பது பிரதமர் கூறுவது வெறும் விளம்பரம் மட்டுமே" என்று விமர்சித்துள்ளார்.