மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் குணால் கோஷ் பதவிநீக்கம்
|திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து குணால் கோஷ் நீக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்காள மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து குணால் கோஷ் நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உடன்படாத கருத்துக்களை குணால் கோஷ் பேசி வந்ததால் அவர் பதவிநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொல்கத்தா வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தபஸ் ராயுடன் குணால் கோஷ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, அவரைப் பற்றி பாராட்டி பேசியிருந்தார். ஏற்கனவே குணால் கோஷ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இருப்பினும் தொடர்ந்து கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து அவர் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி வந்தார். இந்நிலையில், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் குணால் கோஷ் நீக்கப்பட்டுள்ளார்.