அ.தி.மு.க. கட்சி இருக்காதா? பா.ஜ.க.வை அடையாளம் காட்டியதே அ.தி.மு.க.தான் - ராம சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
|தேர்தலுக்கு அ.தி.மு.க. கட்சி இருக்காது என்று கூறுபவர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர்,
நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் நேற்று கூறினார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது, நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசனின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
ராம சீனிவாசன் தன்னை அடியாளப்படுத்திக்கொள்ள அ.தி.மு.க.வை பற்றியும் என்னைப்பற்றியும் பேசியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. காணாமல் போகுமாம், நீங்கள் கண்டுபிடித்துக்கொடுங்கள். உங்களை போல எத்தனைபேரை அ.தி.மு.க. பார்த்துள்ளது. அ.தி.மு.க. வரலாறு உங்களுக்கு (ராம சீனிவாசன்) தெரியுமா?
நான் உள்பட பொதுக்கூட்ட மேடையில் உள்ள அனைவரும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அ.தி.மு.க.வுக்காக உழைத்தவர்கள். உங்களை போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவுபகல் பாராமல் உழைக்கும் உழைப்பாளிகள் நாங்கள்
நாங்கள் உழைப்பை நம்பி கட்சி நடத்திக்கொண்டிருக்கிறோம். மக்களை நம்பி மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கிறோம்.
உங்களைப்போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை. தமிழ்நாட்டில் அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அ.தி.மு.க. எங்களை பார்த்து 2024 தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. கட்சி இருக்காது என்பதா? பொறுத்திருந்து பாருங்கள் இந்த தேர்தலுக்குப்பின் உங்களைப்போல் வெற்று அரசியல் செய்துகொண்டிருப்பவர்கள் அடையாளம் காணாமல் பொய்விடுவீர்கள்.
1998ல் தான் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தது. அப்போதுதான் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்துவைத்தவர் ஜெயலலிதா. பா.ஜ.க.வை அடையாளம் காட்டியதே அ.தி.மு.க.தான். உங்களின் அடையாளத்தையே அ.தி.மு.க.தான் காட்டியது. எங்களை பார்த்த கட்சி இருக்காது என்று கூறுகிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.