'தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய அரசுகள் கருத்து தெரிவித்திருந்தன. இதற்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டதாக கூறி சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியாவில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே, இந்தியாவிலும் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், 'தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை' என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்தியாவின் மக்கள் உறுதி செய்வார்கள். எனவே, அது குறித்து கவலை கொள்ள வேண்டாம்" என்று தெரிவித்தார்.