ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டு.. மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி: எதிர்க்கட்சிகள் புகார்
|பா.ஜ.க.வின் தாமரை பொத்தானை அழுத்தப்படாதபோதும், பா.ஜ.க.வுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு வந்ததாக எதிர்க்கட்சி வேட்பாளரின் ஏஜென்ட் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடு தொகுதியில் நேற்று நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது, 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வாக்குகளை பதிவு செய்துள்ளன. ஒரு முறை வாக்குப் பொத்தானை அழுத்தினால் பா.ஜ.க.விற்கு 2 வாக்குகள் விழுந்திருக்கின்றன. வி.வி.பாட் இயந்திரத்தில் இரண்டு ஒப்புகைச் சீட்டுகள் பிரின்ட் ஆகியுள்ளன.
இதுபற்றி எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். எல்.டி.எப். கூட்டணி வேட்பாளர் எம்.வி. பாலகிருஷ்ணன், மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
தவறான முடிவுகளை காட்டும் இயந்திரங்களை மாற்றும்படி யு.டி.எப். வேட்பாளர் ராஜ்மோகனின் ஏஜென்ட் முகமது நாசர் செர்கலாம் வலியுறுத்தி உள்ளார். பா.ஜ.க.வின் தாமரை பொத்தானை அழுத்தப்படாதபோதும், அந்த 4 வி.வி.பாட் இயந்திரங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு வந்ததாக அவர் கூறினார்.
இதேபோல் வாக்குப்பதிவின்போது பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வேலை செய்தால் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.