சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - கவிஞர் வைரமுத்து
|சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் உள்பட 950 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் 76 பேர் பெண்கள். 874 பேர் ஆண்கள். இவர்களின் எதிர்காலத்தை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் நிர்ணயம் செய்கிறார்கள்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் "விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்" என்று தெரிவித்துள்ளார்.