டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்
|புதுக்கோட்டையின் கோரிக்கைகள் டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை,
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். புதுக்கோட்டையில் இன்று மாலையில் அ.தி.மு.க.வினர் ரோடு ஷோ பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
திருச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா மண்ணின் மைந்தர். திருச்சி தொகுதியின் வளர்ச்சியை ஜெட் வேகத்தில் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர். கொரோனா காலத்திலும், கஜா புயலின் போதும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் தீவிர பணியாற்றியவர். புதுக்கோட்டையின் கோரிக்கைகள் டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க கருப்பையாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இன்னும் 4 நாட்கள் தொகுதியை சுற்றிவரக்கூடியவர் துரைவைகோ. ஆனால் கருப்பையா தொகுதியில் நாளெல்லாம் சுற்றி வருவார். துரை வைகோவுக்கு இந்த மண்ணை பற்றி எதுவும் தெரியாது. புதுக்கோட்டையில் 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் தண்ணீர் பிரச்சினையை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.வும், நகராட்சி தலைவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை சீர் செய்ய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.