< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
Smriti Irani Trails In Amethi
நாடாளுமன்ற தேர்தல்-2024

அமேதியில் இழந்த செல்வாக்கை மீட்டது காங்கிரஸ்.. மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பின்னடைவு

தினத்தந்தி
|
4 Jun 2024 12:31 PM IST

அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

புதுடெல்லி:

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து அதிக தொகுதிகளில் (296) முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும் 227 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

குறிப்பாக, 80 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. மதிய நிலவரப்படி பா.ஜ.க. 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலை பெற்றது.

காங்கிரசின் கோட்டையாக விளங்கிய அமேதி தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தியை தோற்கடித்த மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, இந்த முறை கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். இன்று மதிய நிலவரப்படி, ராகுல் காந்தி குடும்பத்தின் விசுவாசியான கிஷோரி லால் சர்மா (காங்கிரஸ் வேட்பாளர்) 50758 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் அமேதியில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் மீட்டுள்ளது.

இந்த முறை அமேதி தொகுதியை கிஷோரி லால் சர்மாவுக்கு ஒதுக்கிய நிலையில், ராகுல் காந்தி, காங்கிரசின் கோட்டையான ரேபரேலியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் ராகுல் காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோல் வயநாட்டிலும் ராகுல் காந்தி வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.

மேலும் செய்திகள்