< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாமக்கல்லில் வாகன பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாமக்கல்லில் வாகன பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு

தினத்தந்தி
|
8 April 2024 2:37 PM IST

நாமக்கல் பா.ஜ.க. வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வாக்கு சேகரித்தார்.

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த ராஜ்நாத் சிங், அங்கிருந்து ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு சென்றார்.

அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நாமக்கல்லுக்கு சென்ற அவர், நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் வாகன பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணி நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது.

திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ராஜ்நாத் சிங் ஆதரவு திரட்டினார். இதில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மத்திய மந்திரி வருகையையொட்டி அவர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்