மத்திய மந்திரி அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து
|தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உள்ளது.இதில் தேசிய கட்சியான பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே 3 முறை தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார்.அவரை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரியும், மூத்த தலைவருமான அமித்ஷா இன்று பிரசாரத்துக்காக மதுரை வர இருந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், திடீரென தனது பயணத்தை அமித்ஷா ரத்து செய்தார்.
இதற்கிடையே அமித்ஷா வருகையில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று இரவு அமித் ஷா மதுரை வருவதாகவும், நாளை தென்காசி, கன்னியாகுமரி செல்ல உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் , அமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.