நாங்கள் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படும் - காங்கிரஸ் உறுதி
|காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை, சம்பள பற்றாக்குறை பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பஹுத்வா கர்நாடகா என்ற அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் வேலையின்மையும், சம்பள பற்றாக்குறையும் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. 2011-2012 நிதியாண்டுக்கும், 2022-2023 நிதியாண்டுக்கும் இடையே சமூக பாதுகாப்பு மற்றும் சலுகைகளுடன் கூடிய முறையான வேலைவாய்ப்பில் இருப்பவர்கள் 25 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சுய வேலைவாய்ப்பில் இருக்கும் தனிநபர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதில் பெண்களின் பங்கு 56.5 சதவீதத்தில் இருந்து 64.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2011-2012 நிதியாண்டுக்கும், 2022-2023 நிதியாண்டுக்கும் இடையே சம்பளம் அதிகரித்தது. ஆனால், விலைவாசி உயர்வுடன் ஒப்பிடுகையில் அவர்களது சம்பள உயர்வு போதுமானது அல்ல.
நாட்டில் 34 சதவீத குடும்பங்கள், நாள் ஒன்றுக்கு ரூ.375-க்கும் குறைவான ஊதியத்தையே ஈட்டுகின்றன. தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.400 என்று நிர்ணயித்தால், சம்பள பற்றாக்குறையை தீர்க்க முடியும்.
மக்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை அறிந்த பிறகே 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஓராண்டு பயிற்சி, ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்துள்ளோம். இந்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை, சம்பள பற்றாக்குறை பிரச்சினைகளை தீர்த்து, நாட்டை வளமான பாதைக்கு அழைத்து செல்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.