ராகுல் காந்தி பிரதமராக உத்தவ் தாக்கரே ஆதரவு
|பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.
கூட்டணி கட்சிகள் மொத்தம் 52 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன. பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.
பா.ஜ.க கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துடன் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா, ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளார்
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. இதற்காக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.