தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்... மம்தாவின் வாக்குறுதிகள் என்ன?
|திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில் சிஏஏ-வை திரும்பப் பெறுதல், என்.ஆர்.சி-ஐ நிறுத்துதல் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தா,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தலானது ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேற்கு வங்காளம்,தமிழ்நாடு, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய 8 மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 'தீதியின் உறுதிமொழிகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தத் தேர்தல் அறிக்கையில், மொத்தம் 10 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில்,
* தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 400 தினசரி ஊதியத்துடன் 100 நாள் வேலைக்கான உத்தரவாதம்.
* அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் இலவச வீட்டுவசதி.
* வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 10 இலவச எரிவாயு சிலிண்டர்கள்.
* அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வீட்டு வாசலில் இலவச ரேஷன் விநியோகிக்கப்படும்.
* எஸ்சி / எஸ்டி பிரிவினரின் உயர்கல்விக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படும்.
* முதியோர் உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்படும்.
* சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.
* பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை நிலைப்படுத்த நிதி, 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா முடித்தவர்களுக்கு பயிற்சி.
* சி.ஏ.ஏ. சட்டம் ரத்து செய்யப்படும்.
* என்.ஆர்.சி. நிறுத்தப்படும். நாட்டில் பொது சிவில் சட்டம் இருக்காது.
* நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான கன்னியஸ்ரீ போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் போன்ற வாக்குறுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் வழங்கியுள்ளது.
இந்த வாக்குறுதிகள் பெங்காலி, ஆங்கிலம், இந்தி, உருது, நேபாள், சந்தால்,ஆகிய 6 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.