அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
|மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை பா.ஜ.க. கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அ.தி.மு.க.விற்கே உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அரியலூர்,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரியலூரில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தலுக்குப் பிறகு உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு தெரியும். எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அ.தி.மு.க. தெய்வ சக்தி உள்ள கட்சி; அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அ.தி.மு.க.வை சீண்டி பார்க்காதீர்கள்; அப்படி பார்த்தால் என்ன ஆகும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள். இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.
வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கெல்லாம் அ.தி.மு.க. என்றைக்கும் பயப்படாது. அ.தி.மு.க.வை அழித்த நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கி கொண்டு அலைகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பார்க்கவே இல்லை. தேர்தல் காரணமாக தற்போதுதான் தேநீர் கடைக்கு வந்து மக்களை சந்தித்துள்ளார். சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதை மட்டுமே முதல்வர் செய்கிறார். தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். கஞ்சா கிடைக்காத இடமே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.
மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை பா.ஜ.க. கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அ.தி.மு.க.விற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும்போது எதிர்ப்போம்; பாராட்டும்போது பாராட்டுவோம். அதுவே அ.தி.மு.க. ஸ்டைல்.
கூட்டணியை நம்பி அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கவில்லை. மக்களை நம்பியே சந்திக்கிறோம். கூட்டணியில் இருந்தவரை பா.ஜ.க.விற்கு விசுவாசமாக இருந்தோம்; தற்போது விலகிவிட்டோம். பா.ஜ.க.வை எதிர்க்கவில்லை என்று கூறுகின்றனர். அதற்காக பா.ஜ.க.வினரை சுட்டா வீழ்த்த முடியும்? இவ்வாறு அவர் பேசினார்.