விடுபட்டவர்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்: பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி உறுதி
|கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் 1.16 கோடி பெண்கள் பயன்பெறுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சிதம்பரம்,
சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;
"இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக பெற்றோர்கள் திராவிட மாடல் அரசை பாராட்டுகிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசு.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் கடந்த செப்டம்பர் 15ம்தேதி தொடங்கி மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை அவரவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
1.16 கோடி பெண்கள் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தால் பயன்பெறுகின்றனர். நீங்கள் சொல்ல நினைப்பது எனக்கு புரிகிறது. பக்கத்து வீட்டு பெண்ணிற்கு ரூ.1,000 உரிமைத்தொகை வந்துள்ளது. எனக்கு வரவில்லை என்கிறீர்கள். இது மிகப்பெரிய திட்டம். இந்த திட்டத்திற்காக 1.60 கோடி மகளிர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தகுதியானவர்களாக 1.16 கோடி மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். இது தேர்தல் நேரம். இன்னும் 5 அல்லது 6 மாதங்களுக்கு பின், மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள 1.60 கோடி மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வந்து சேரும். 1.16 கோடி பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்கும் முதல்-அமைச்சர், எஞ்சிய 40 லட்சம் மகளிருக்கும் கண்டிப்பாக கொடுப்பார்." இவ்வாறு அவர் கூறினார்.