< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாட்டின் பணக்கார வேட்பாளர்: தெலுங்குதேசம் கட்சி வேட்பாளருக்கு ரூ.5,785 கோடி சொத்துகள்

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

நாட்டின் பணக்கார வேட்பாளர்: தெலுங்குதேசம் கட்சி வேட்பாளருக்கு ரூ.5,785 கோடி சொத்துகள்

தினத்தந்தி
|
24 April 2024 2:38 AM IST

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் ரூ.5,785 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.

அமராவதி,

நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1-ந் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், 4-ந் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழங்கும் பிரமாண பத்திரத்தின் மூலம் அவர்கள் சொத்து விவரங்கள் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் வேட்பாளர்கள் சிலரின் சொத்து விவரங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சொத்து விவரங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர்தான் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.

அவர் குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார். அவரது குடும்பத்திடம் மொத்தமாக ரூ.5,785 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தனிப்பட்ட சொத்துகள் ரூ.2,448.72 கோடியாகவும், அவரது மனைவி ஸ்ரீரத்னா கோனேருவுக்கு ரூ.2,343.78 கோடி மதிப்புள்ள சொத்துகளும், அவரது பிள்ளைகளிடம் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி சொத்துகளும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர், தொழில் அதிபர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்ட பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன.

மேலும் செய்திகள்