நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் இது - கனிமொழி எம்.பி.
|பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார்.
அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
புயல், வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. புயல், வெள்ள பாதிப்பின்போது வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். தேர்தல் வந்தவுடன் பிரதமர் மோடிக்கு தமிழ் மொழி மீது பாசம் வந்துள்ளது. இந்தி கற்க கூறும் பிரதமர் மோடி நல்ல ஆசிரியரை பார்த்து தமிழ் கற்றுக்கொள்ளலாம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவதுதான் பா.ஜ.க.வின் உண்மையான முகம்
வரும் நாடாளுமன்ற தேர்தல் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல். சாதாரண, சாமானிய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல். மீனவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் இது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது; அப்படி ஒரு விபத்து நேர்ந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாகும்.
இந்தியாவையும், நமது உரிமைகளையும், மீனவ, விவசாயிகளின் உரிமைகளையும் மீட்டு எடுக்கின்ற தேர்தல் இது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.