< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
Congress candidate KL Sharma who defeated Smriti Irani
நாடாளுமன்ற தேர்தல்-2024

'என்னை பணிவாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்' - ஸ்மிரிதி இரானியை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா

தினத்தந்தி
|
5 Jun 2024 9:00 AM GMT

எப்போதும் பணிவாக இருக்கும்படி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக அமேதியில் வெற்றி பெற்ற கே.எல்.சர்மா தெரிவித்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்மிரிதி இரானி போட்டியிட்டார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கே.எல்.சர்மாவை அமேதி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. முன்னதாக அமேதி தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

இந்த முறை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து பா.ஜ.க.வினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா 5,39,228 வாக்குகளைப் பெற்று 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே சமயம் ஸ்மிரிதி இரானி 3,72,032 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

இது குறித்து ஸ்மிரிதி இரானி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சிக்காக உழைத்த பா.ஜ.க. உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். அமேதி தொகுதி மக்களுக்காக எனது சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன்" என்று கூறினார்.

இந்நிலையில், வெற்றி பெற்ற கே.எல்.சர்மா இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைக் கொண்டு வந்து சோனியா காந்தியிடம் ஆசி பெற்றேன். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடன் இருந்தனர். நான் எம்.பி. ஆகிவிட்டதால் ஆணவம் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் இப்போது இருப்பது போலவே எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். இந்த அறிவுரையை நான் எப்போதும் பின்பற்றுவேன்.

நான் எல்லோருக்குமான எம்.பி.யாக இருப்பேன். அனைவருக்காகவும் உழைப்பேன். ஒருவர் வெற்றி பெறும்போது அவரது தோள்களின் மீது கடமைகளும் வந்து சேர்ந்துவிடுகின்றன. அந்த கடமைகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். மக்களுடன் சேர்ந்து பணியாற்றும்போது நமக்கு வெற்றி கிடைக்கும். அமேதி தொகுதி மக்களுக்கு என்ன தேவைகள் இருக்கின்றன என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். அவர்களிடம் ஆலோசிக்காமல் எந்த திட்டத்தையும் நான் செயல்படுத்த மாட்டேன்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்