அரசியலமைப்பு சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது - ராஜ்நாத் சிங்
|அரசியலமைப்பு சட்டத்தில் அதிகபட்ச திருத்தங்களை செய்தது காங்கிரஸ் கட்சி தான் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
நாடாளுமன்ற தேர்தலில் லக்னோ தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்பது நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று பிரதமர் மோடியும் கூறி வருகிறார். எதிர்க்கட்சிகள்தான் வாக்குகளை பெறுவதற்காக நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. இந்திய அரசியலில் நம்பகத்தன்மையின்மையையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியதற்கு காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் காரணம்.
அரசியலமைப்பு சட்டத்தில் அதிகபட்ச திருத்தங்களை செய்தது காங்கிரஸ் கட்சி தான். அரசியலமைப்பின் முகப்புரையில் எந்த மாற்றமும் செய்யப்படக்கூடாது என்பது எங்கள் அனைவரின் விருப்பம். ஆனால் 1976ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் அரசு அதை மாற்றியது.
இந்த முறையும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்க போகிறது என்று நாடு முழுவதும் உள்ள அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். 400 இடங்களை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். 2024 மட்டுமல்ல, 2029லும் மோடியே நாட்டின் பிரதமராக இருப்பார்.
2024 தேர்தலுக்கு பிறகு மோடி பிரதமர் ஆக மாட்டார் என கெஜ்ரிவால் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கெஜ்ரிவால் தற்போது ஜாமீனில் வெளியேவந்துள்ளார். 2ம் தேதி அவர் மீண்டும் சிறை செல்ல வேண்டும். அவர் பிரதமரை பற்றி முட்டாள் தனமாக பேசுகிறார். 2024ல் மட்டுமல்ல, 2029ம் ஆண்டிலும் மோடி பிரதமராக வேண்டும் என்று முழு நாடும் விரும்புகிறது.
பொய்களை மட்டும் சொல்லி அரசியல் செய்ய முடியாது என்று நான் கூற விரும்புகிறேன். உண்மையை பேசுவதன் மூலம் அர்த்தமுள்ள அரசியல் செய்ய முடியும். டெல்லியின் வளர்ச்சி பற்றி நிறைய கூற்றுக்களை கெஜ்ரிவால் கூறுகிறார். ஆனால் உண்மை நிலை என்னவென்பதை அங்கு நேரில் போய் பாருங்கள்."
இவ்வாறு அவர் கூறினார்.