'வாரணாசியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|வாரணாசி தொகுதியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
லக்னோ,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் வாரணாசி தொகுதியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது;-
"பொதுமக்களிடம் அரசாங்கம் குறித்த பின்னூட்டத்தை கேட்டு தெரிந்து கொள்வது மோடி அரசின் வழக்கம். இந்த முறை தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் வெளியுறவு கொள்கை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். பிரதமர் மோடி இந்த நாட்டை எத்தகைய இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் என்பதை அறிந்து மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஜி-20 மாநாட்டை ஒரு திருவிழாவைப் போல் நாட்டின் 60 நகரங்களில் கொண்டாடினோம். காசி நகரத்தை நாம் இன்னும் அதிகமாக விளம்பரப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் இங்கு சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சியடையும். வாரணாசியை பொறுத்தவரை, அங்கு அதிகமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை."
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.