அரசியலுக்கான விளக்கம், நினைப்பு எல்லாம் பிரதமர் மோடியால் மாறியிருக்கிறது: ஜே.பி. நட்டா
|பிரதமர் மோடி தலைமையின் கீழ் பொம்மைகள் ஏற்றுமதியில் 3-வது இடத்திற்கும், ஸ்டீல் உற்பத்தியில் 4-ம் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கும் இந்தியா முன்னேறியுள்ளது.
திகம்கார்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் திகம்கார் பகுதியில் நடந்த பொது கூட்டமொன்றில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும்போது, மோடியின் தலைமையின் கீழ், அரசியலுக்கான விளக்கம், கலாசாரம், நினைப்பு என எல்லாம் மாறியிருக்கிறது.
அரசியலில் எந்தவித மாற்றமும் இருக்காது. இப்படியே தொடரும் என்று 10 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் கூறுவது வழக்கம். அனைத்து இடங்களிலும் நம்பிக்கையற்ற சூழல் இருந்தது. ஆனால் இன்றோ, நாடு மாறி விட்டது. வளர்ச்சிக்கான பாதையில் செல்கிறது என பொதுமக்கள் கூற தொடங்கி விட்டனர் என்றார்.
2019-ம் ஆண்டில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்து ஒரு முக்கிய முடிவை எடுத்தீர்கள். அதனால், நாட்டில் ஒரு நிலையான அரசு அமைய வழியேற்பட்டது. நிலையான அரசாலேயே, ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டது என கூறியுள்ளார்.
இதற்கு முன் சீனாவில் இருந்தே பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டன. தீபாவளியின்போது, விநாயகர் சிலையும் சீனாவில் இருந்தே கொண்டு வரப்பட்டு வீட்டை அலங்கரிக்கும். ஆனால், பொம்மைகள் ஏற்றுமதியில் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. ஸ்டீல் உற்பத்தியில் 4-ம் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முன்னேற்றத்திற்கான விசயங்களில் மிக பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். உலக அளவில் பொருளாதாரத்தில் 5-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும் என நீங்கள் எப்போதேனும் எண்ணி பார்த்ததுண்டா? ஆனால், 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிரிட்டனை பின்னுக்கு தள்ளி விட்டு, இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மோடியை 2024-ம் ஆண்டில் 3-வது முறையாக பிரதமராக்குங்கள். 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறும் என்று அவர் பேசியுள்ளார்.