< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது

தினத்தந்தி
|
17 April 2024 6:00 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் ஓய்ந்தது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த 27ம் தேதி மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1 ஆயிரத்து 85 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற கடந்த 30ம் தேதி மாலை 5 மணிவரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் 135 பேர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனர்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் ஆகும்.

இதையடுத்து, தேர்தல் பரப்புரை தீவிரமடைந்தது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர், காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., உள்பட பல்வேறு கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ் உள்பட பல்வேறு தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் தற்போது ஓய்ந்தது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

மேலும் செய்திகள்