தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
|தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, காங்கிரஸ் 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமானவரிக்கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ. 1,800 கோடி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பழைய பான் கார்டு எண்ணை வைத்து வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 11 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், தி.மு.க. மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த துரைமுருகன்,
எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கோடு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆட்சி அவர்கள் கையில் உள்ளதால் அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்கின்றனர். மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையமே மத்திய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் தெரிகிறது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சின்னங்களை கேட்டால் அவர்கள் கேட்கும் சின்னங்களை தேர்தல் ஆணையம் உடனே வழங்குகிறது.
எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள், ஏற்கனவே அந்த சின்னத்தை உபயோகப்படுத்தியிருந்தால் கூட சின்னத்தை கொடுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. அப்படியானால் மற்றவர்கள் கூறுவதைபோல தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் நடந்துகொள்வது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.