< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024

காங்கிரஸ் 60 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை பா.ஜனதா 10 ஆண்டுகளில் சாதித்துள்ளது - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
30 April 2024 1:51 PM IST

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் 2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், எஞ்சிய 3 கட்ட தேர்தலுக்காக பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்தநிலையில், மராட்டியத்தில் மாதா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஆசி கேட்டு வந்துள்ளேன். மக்களின் அன்பே என்னை வலிமையாக்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எனது வாழ்க்கையை மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணித்துள்ளேன்.10 ஆண்டு மோடி ஆட்சி மற்றும் 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு இடையேயான வித்தியாசத்தை மக்கள் உணரலாம். ஆறு தசாப்தங்களில் அவர்களால் சாதிக்க முடியாததை ஒரு தசாப்தத்தில் சாதித்துள்ளோம். பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட போட்டியிடாத கட்சிக்காக உங்கள் வாக்கை வீணடிக்காதீர்கள்.

15 ஆண்டுகளுக்கு முன், மிகப் பெரிய தலைவர் ஒருவர் இங்கு தேர்தலில் போட்டியிட வந்தார். அப்போது அவர், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் தருவதாக உறுதிமொழி அளித்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போது அவரை தண்டிக்கும் நேரம் வந்துவிட்டது.

காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்ய நாடு வாய்ப்பு அளித்தது. இந்த 60 வருடங்களில் உலகின் பல நாடுகள் முற்றிலும் மாறிவிட்டன. ஆனால் காங்கிரசால் விவசாயிகளின் வயல்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க முடியவில்லை 2014-ம் ஆண்டில், சுமார் 100 நீர்ப்பாசன திட்டங்கள் பல தசாப்தங்களாக முடங்கியுள்ளன. அதில் 26 திட்டங்கள் மராட்டியத்தில் சேர்ந்தவை. மாராட்டியத்தில் காங்கிரஸ் எவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.

காங்கிரஸ் தலைவர்கள் வறுமை ஒழிப்பு குறித்து மட்டுமே பேசினர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன். ரெயில்வே, நெடுஞ்சாலை மற்றும் விமானத்துறையில் அதிகளவு முதலீடு செய்துள்ளோம். உள்கட்டமைப்புக்கு காங்கிரஸ் 10 ஆண்டுகளில் முதலீடு செய்ததை நாங்கள் ஒரே ஆண்டில் செய்தோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்