'வாக்கு பொறுக்கிகள்' கதையைக் கூறி வாக்கு சேகரித்த தங்கர்பச்சான்
|எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய ‘வாக்கு பொறுக்கிகள்’ என்ற கதையை கூறி தங்கர்பச்சான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடலூர்,
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரபல சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரசாரத்தின்போது 'வாக்கு பொறுக்கிகள்' என்ற கதையைக் கூறி தங்கர்பச்சான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-
"எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஒரு கதை எழுதியுள்ளார். 48 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கதையின் பெயர் 'வாக்கு பொறுக்கிகள்'. ஒரு தேர்தலில் சுயநல எண்ணம் கொண்ட 3 வேட்பாளர்கள் போட்டியிடுவதே அந்த கதையின் கரு. இதில் யாரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்? வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது கதையை அவர் முடித்து விடுகிறார். இப்படி ஒரு தேர்தல் எதற்கு? என அவர் கேட்கிறார்.
எனவே வேட்பாளர்களை நன்றாக புரிந்துகொண்டு தேர்ந்தெடுங்கள். எத்தனை முறை நீங்கள் தோற்றுக்கொண்டே இருப்பீர்கள்? இந்த தேர்தலில் தங்கர்பச்சான் போட்டியிடுவது உங்களுக்காக. மற்றவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவும், தங்கள் கட்சி பெருமைக்காகவும் போட்டியிடுகிறார்கள்."
இவ்வாறு தங்கர்பச்சான் பேசினார்.