< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தல்-2024

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தினத்தந்தி
|
8 April 2024 1:46 PM IST

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவிரைவு ரெயிலில் உரிய ஆவணங்களின்றி நான்கு கோடிக்கும் கூடுதலான தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பா.ஜ.க. உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பணம் பா.ஜ.க. வேட்பாளரும், தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள நயினார் நாகேந்திரன் அவர்களது தேவைக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கைதானவர்கள் விசாரணையில் கொடுத்துள்ள வாக்குமூலம் அதனை உறுதிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி கடுமையான குற்றமாகும். தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கும் எதிரானதாகும். சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறைகளை சீர்குலைத்து, வாக்காளர் உணர்வுகளை தங்களது தீய செல்வாக்குக்கு அடிபணிய நிர்பந்திக்கும் குற்றச்செயலாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது இந்திய தேர்தல் ஆணையம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்த நடத்தை விதிமீறல் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உறுதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்