பா.ஜ.க. சதித்திட்டத்தின் முகமாக சுவாதி மாலிவால் உள்ளார் - ஆம் ஆத்மி
|அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைக்க பா.ஜ.க. தீட்டிய சதித்திடத்தின் முகமாக சுவாதி மால்வால் உள்ளார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
டெல்லி,
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த 13ம் தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். மேலும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் பிபவ் குமார் தாக்கியதாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
சுவாதி மாலிவால் புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிபவ் குமார் வீட்டில் இல்லாததால் நிலையில் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைக்க பா.ஜ.க. தீட்டிய சதித்திடத்தின் முகமாக சுவாதி மால்வால் உள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
சுவாதி மால்வால் விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
முதல்-மந்திரி கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சுவாதி மால்வால் எந்த முன் அனுமதியும் பெறாமல் வந்துள்ளார். கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே சுவாதி மால்வாலின் நோக்கமாக இருந்துள்ளது. சுவாதி கூறிய பொய்களை இன்று பரவிய வீடியோ வெளிப்படுத்தியுள்ளது. மால்வால் போலீசிடம் கொடுத்த புகாரில் பிபவ் குமாரால் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், வலியில் துடித்ததாகவும், சட்டை பட்டன்கள் கிழிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், வைரலாக பரவி வரும் வீடியோ புதிய உண்மையை கொண்டுள்ளது.
ஓய்வெடுக்கும் அறையில் சுவாதி மாலிவால் சவுகரியமாக அமர்ந்திருப்பது வீடியோவில் தெரிகிறது. அவர் பாதுகாப்பு ஊழியர்களை மிரட்டியுள்ளார். மேலும், அவரின் உடைகள் கிழிக்கப்படவில்லை. பிபவ் குமாரை சுவாதி மாலிவால் மிரட்டுவது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. சுவாதியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதரமற்றவை. கெஜ்ரிவாலை சந்திக்க வேண்டுமென சுவாதி முறையிட்டுள்ளார். முதல்-அமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பரபரப்பான வேலை உள்ளது என்பதை மாநிலங்களவை எம்.பி.யான சுவாதி அறிந்திருக்க வேண்டும். முதல்-மந்திரிக்கு அதிகப்படியான பரபரப்பான வேலை உள்ளதால் உங்களை சந்திக்க முடியாது என சுவாதியிடம் பிபவ் குமார் கூறியுள்ளார். ஆனால், பிபவ் குமாரிடம் சுவாதி கத்தியுள்ளார். பிபவ் குமாரை தள்ளிவிட்டு முதல்-மந்திரி தங்கி இருந்த அறைக்குள் செல்ல சுவாதி முயற்சித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைக்க பா.ஜ.க. தீட்டிய சதித்திடத்தின் முகமாக ஸ்வாதி மால்வால் உள்ளார் என்பதை இந்த ஒட்டுமொத்த சம்பவமும் உறுதிபடுத்தியுள்ளது. ஸ்வாதி மீது பிபவ் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு அதிஷி கூறினார்.