< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மதுரையில் அமித்ஷா நிகழ்ச்சி திடீர் ரத்து: டிரோன் பறந்தது காரணமா..?

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

மதுரையில் அமித்ஷா நிகழ்ச்சி திடீர் ரத்து: டிரோன் பறந்தது காரணமா..?

தினத்தந்தி
|
4 April 2024 4:23 AM IST

டிரோன் பறந்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) விமானம் மூலம் மதுரை வந்து பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் பேச இருந்தார். இதற்காக பா.ஜனதாவினரும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர். இதே போல் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு சென்றும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது.

இந்த நிலையில் மதுரைக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வருகை திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அது குறித்து கட்சியினரிடம் கேட்ட போது நிகழ்ச்சி ரத்து என்று மட்டும்தான் எங்களுக்கு தகவல் வந்துள்ளதாகவும், வேறு ஒரு தேதிக்கு நிகழ்ச்சி மாற்றப்படலாம் என தெரிவித்தனர். அதை தொடர்ந்து பழங்காநத்தம் பகுதியில் போடப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை பிரிக்கும் பணி நடந்தது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அமித்ஷா பங்கு பெற இருந்த பொதுக்கூட்ட மேடைக்கு மேலே டிரோன் ஒன்று பறந்துள்ளது. மேடை அமைக்கும் பணியில் இருந்தவர்கள் இது குறித்து கட்சியினருக்கும், போலீசாருக்கும் தெரிவித்தனர். உடனே சுப்பிரமணியபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

டிரோன் பறக்கவிட்டவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் மதுரையை பற்றி குறும்படம் எடுக்க உள்ளதாகவும், அதற்காக போலீஸ் நிலையத்தில் அனுமதிக்காக விண்ணப்பித்து இருப்பதாக கூறி உள்ளனர். ஆனால் அமித்ஷா நிகழ்ச்சி இருப்பதால் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். எனவே நள்ளிரவில் மதுரை பழங்காநத்தம் பகுதியை படம் எடுக்க டிரோன் பறக்க விட்டதாக தெரிவித்தனர். அது தொடர்பாக போலீசார் டிரோன் பறக்க விட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர்கள், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சத்தியநாராயணன், மதுரை மேலபொன்னகரத்தை சேர்ந்த நவீன்குமார், இஷாத் ஆகியோர் என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, டிரோனை பறிமுதல் செய்தனர். எனவே அமித்ஷா நிகழ்ச்சி ரத்துக்கு டிரோன் பறந்த விவகாரம் காரணமாக இருக்குமா? என்று கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்