பரபரக்கும் நாடாளுமன்ற தேர்தல்: 9-ந்தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி
|பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வாகன அணிவகுப்பு மூலம் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக பா.ஜனதாவும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர களப்பணியாற்றி வருகிறது.
இந்த சூழலில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். தொடர்ந்து, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கும் சென்று பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தி.மு.க மற்றும் இந்தியா கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்தார். கோவையில் பிரதமர் மோடி வாகன அணிவகுப்பு நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறங்களிலும் பா.ஜனதா தொண்டர்கள், பொது மக்கள் திரண்டிருந்து அவருக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
இந்தநிலையில், சென்னையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக, வருகிற 9-ந்தேதி, சென்னைக்கு பிரதமர் மோடி வருகை தர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் பிரமாண்டவாகன அணிவகுப்பு நடத்த பா.ஜனதா திட்டமிட்டிருப்பதாகவும், தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பயண திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி நீலகிரி, பெரம்பலூர், வேலூர் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.