< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
சாதிவாரி கணக்கெடுப்பு:  அக்னிபாத் திட்டம் ரத்து - தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய சமாஜ்வாதி கட்சி
நாடாளுமன்ற தேர்தல்-2024

"சாதிவாரி கணக்கெடுப்பு: அக்னிபாத் திட்டம் ரத்து" - தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய சமாஜ்வாதி கட்சி

தினத்தந்தி
|
11 April 2024 12:28 AM IST

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்பது உள்பட ஏராளமான வாக்குறுதிகள் சமாஜ்வாதியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

லக்னோ,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. இதில் உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது.இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்த அந்த கட்சி, தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையே கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்டார்.

'மக்கள் கோரிக்கை கடிதம் - நமது உரிமைகள்' என்ற தலைப்பில் 20 பக்கங்களில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், 'மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும் அரசு பணியில் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்கள் 2025-ம் ஆண்டுக்குள் நிரப்பப்படும்' என்று கூறினார்.

முப்படைகளில் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் எனக்கூறிய அகிலேஷ் யாதவ், ஆயுதப்படைகளில் வழக்கமான முறைப்படி ஆட்தேர்வு நடத்தப்படும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

இந்த வாக்குறுதிகளை தவிர பழைய ஓய்வூதி திட்டம், தனியார் துறையில் சமூகத்தின் அனைத்து துறையினரும் பங்கேற்பு, 2029-க்குள் வறுமை ஒழிப்பு போன்ற வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு உள்ளன.

மேலும் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம், வேளாண் கடன் தள்ளுபடி, இலவச நீர்ப்பாசன வசதிகள், விவசாயிகள் கமிஷன் அமைப்பு, நிலமற்ற சிறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் போன்ற அறிவிப்புகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.

இதைப்போல நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 2 ஆண்டுகளுக்குள் மகளிர் இடஒதுக்கீடு அமல், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் செல்போன் இணையவசதி, இலவச கல்வி உரிமை, ரேஷனில் கோதுமைக்கு பதிலாக மாவு உள்ளிட்ட வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டு உள்ளன.

சமாஜ்வாதியின் இந்த தேர்தல் அறிக்கை தொண்டர்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 62 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 17 இடங்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு ஓரிடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்