மோசமான வானிலை: ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் அமித்ஷாவின் பிரசார பயணம் ரத்து
|மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் அமித்ஷாவின் பிரசார பயணம் ரத்து செய்யபட்டது.
கொல்கத்தா,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, மேற்குவங்காளத்தில் மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 3 தொகுதிகளுக்கு 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் டார்ஜிலிங்கில் இன்று பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பங்கேற்க இருந்தார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் டார்ஜிலிங் வர திட்டமிட்டிருந்தார்.
ஹெலிகாப்டரில் புறப்பட்ட அமித்ஷா பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வரவிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அமித்ஷா வந்த ஹெலிகாப்டர் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து, அமித்ஷா தனது பயணத்தை ரத்து செய்தார். ஹெலிகாப்டர் மீண்டும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றது.