கூட்டணி இல்லாமல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டிடும் ஒரே கட்சி - சீமான் பரபரப்பு பேட்டி
|40 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான் என்று சீமான் தெரிவித்தார்.
கன்னியாகுமரி,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் தருகிறது. நாங்கள் வளர்வது அவர்களுக்கு இடையூறு என நினைக்கிறார்கள். அதனால் சின்னம் உள்ளிட்ட விஷயங்களில் பிரச்சினை கொடுக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் போல் செயல்படுகிறது. அண்ணாமலை மனுவை தவறாக போட்டு உள்ளார். அதனை நிராகரிக்காமல் வாங்கி வைத்துவிட்டு, முடிவெடுக்காமால் தாமதப்படுத்தியதற்கு காரணம் தேர்தல் அலுவலர் அண்ணாமலையுடன் படித்தவர். இப்படிதான் அதிகாரம் வேலை செய்கிறது.
40 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான். தேர்தலில் மற்ற கட்சிகளில் மூத்த தலைவர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றால் கட்சி பிளவுபடும். லட்சத்துக்கு வேலை பார்ப்பவர்கள் இதை யோசிப்பார்கள், இலட்சியத்துக்காக வேலை பார்ப்பவர்கள் இதை யோசிக்க மாட்டார்கள். எனக்கு வாக்கு செலுத்த நினைக்கும் மக்கள் சீமானின் சின்னம் என்ன என்று கேட்பார்கள். அது மைக் என தெரிந்து கொண்டு வாக்களிப்பார்கள்."
இவ்வாறு அவர் கூறினார்.