முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது
|கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.
தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பலகட்ட பணிகளை பக்குவமாக முடித்த தலைவர்கள், தற்போது சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.
ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது மனுக்களை தேர்தல் அலுவலகங்களில் தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தற்போது நடைபெற்று வருகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.